அதிமுகவில் இணைய இதுவரை 1.60 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவில் உறுப்பினர்களாக சேருவதற்கு இதுவரை 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக்கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2 கோடி பேர்களை உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், இன்றைய தேதி வரை 1 கோடியே 60 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைந்திட எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், கழகத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக் கெடுவை நீட்டித்து தருமாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 19.07.2023 மாலை 5 மணிவரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே இறுதியான கால அவகாசமாகும். புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE