அமைச்சர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை - கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் துரைமுருகனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கோரிக்கைகளுக்கு குழு அமைத்து தீர்வுகாண முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து, கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள், 3500-க்கும் மேற்பட்ட கிரஷர் அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு கல்குவாரி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில விதிமுறைகளை கொண்டு வந்தது.

இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் கடந்த ஜூன் 26-ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இயற்கை வளங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூலை 3-ம் தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இயற்கை வளங்கள் துறை செயலர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் எல்.நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு குழு அமைத்து ஆராய்ந்து தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக முடிவெடுத்து, ஜூலை 4-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்குவாரி மற்றும் கிரஷர்களும் இயங்கும் என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE