திருச்சி: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய இடங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் சிலவற்றில் கூண்டு பழுதானதால், மழை பெய்யும் போது தண்ணீர் உள்ளே வருவதும், ஜன்னல்கள், இருக்கைகள் பழுதடைந்ததால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையும் இருந்து வந்தது. இந்த பேருந்துகளுக்கு புதிய கூண்டு கட்ட முடிவு செய்யப்பட்டு, பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலிருந்து 1,000 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்க ரூ.152.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கென 6 முதல் 8 ஆண்டுகள் (சுமார் 7 லட்சம் கி.மீ. முதல் 8 லட்சம் கி.மீ. வரை) ஓடிய நிலையில், கூண்டுகள் பழுதாகி, அடிச்சட்டம் (சேசிஸ்) நன்றாக உள்ள பேருந்துகள் கண்டறியப்பட்டு தனியார் பேருந்து கட்டுமான நிறுவனங்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில், முதல்கட்டமாக 125 பேருந்துகள் நவீன தொழில்நுட்பத்துடன் இன்னும் ஓரிரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
» அமைச்சர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை - கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
1,000 பழைய பேருந்துகளின் கூண்டுகளை புதிய, நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கென விராலிமலை, கரூர், மதுராந்தகம், பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்களில் பழைய பேருந்துகளை புதுப்பிக்கும் பணிமுழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பேருந்துகளில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் இருக்கும். முதல்கட்டமாக புதுப்பிப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள 125 பேருந்துகள் ஓரிரு வாரங்களில் போக்குவரத்துக் கழகங்களில் மக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும். பயணிகள் சேவை பாதிக்காத வகையில் மீதமுள்ள 875 பழைய பேருந்துகள் படிப்படியாக புதுப்பிக்கப்படும் என்றார்.
தற்போதைய நிலவரப்படி புதிய பேருந்து சாலைக்கு வருவதற்கு ஏறத்தாழ ரூ.42 முதல் ரூ.45 லட்சம் வரை ஆகிறது. பழைய பேருந்துகளை கூண்டுகளை மாற்றி புதுப் பிக்க ஏறத்தாழ ரூ.15 லட்சம் செலவாகிறது. மேலும், போக்குவரத்துக் கழகங்களில் 15 ஆண்டுகள் ஆன ஏறத்தாழ 1,500 பேருந்துகள் சேவையிலிருந்து நீக்கப்படவுள்ளன. அதற்குப் பதிலாக, தற்போது மாநில அரசின் நிதியிலிருந்து 2,000 பேருந்துகளும், ஜெர்மன் வங்கி நிதி மூலம் 2,200 பேருந்துகள் புதிதாக வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, நிறைவடையும் நிலையில் உள்ளது என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்துகளில் உள்ள வசதி: பயணிகளின் சொகுசான பயணத்துக்கு பக்கெட் சீட்டுகள், தீத்தடுப்பு உபகரணம், அவசர கால கதவு, ஹைட்ராலிக் கதவுகள், பேருந்தின் வெளிப்புறத்தில் பயணிகளின் பெரிய உடமைகளை வைக்க லக்கேஜ் கம்பார்ட்மென்ட் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பேருந்தின் உள்ளே பயணிகளின் உடமைகளை வைக்க பெரிய அளவிலான கேரியர், உட்புறம் அலுமினியம் காம்போசிட் ஷீட், எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்இடி பலகைகள், அதிக வெளிச்சம் தரும் 6 முகப்பு விளக்குகள் உள்ளிட்டவை நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இருந்த 57 இருக்கைகளுக்கு பதிலாக 52 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் இருக்கைகளில் வசதியாக அமரலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago