ஆட்கள் தேர்வு என பரவிய போலி தகவலால் போச்சம்பள்ளி காலணி நிறுவனத்தில் திரண்ட இளைஞர்கள்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே காலணி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் ஆட்கள் தேர்வு நடப்பதாக சமூக வலைதளத்தில் பரவிய போலி தகவலை நம்பி, நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்நிறுவனத்தின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போச்சம்பள்ளி அருகே ஒலைப் பட்டி சிப்காட் வளாகத்தில் காலணி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் நேற்று (4-ம் தேதி) ஆட்கள் தேர்வு பணி நடக்கவுள்ளதாக வாட்ஸ் அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவியது.

இதை நம்பி காலணி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முன்பு நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பத்துடன் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, காலணி தயாரிப்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் ஆட்கள் தேர்வு இல்லை என தெரிவித்தனர். இதனால், அங்கு திரண்டிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுதொடர்பாக காலணி தயாரிப்பு நிறுவனத்தினர் கூறும்போது, “கடந்த ஓராண்டுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. புதிதாக ஆட்கள் தேர்வு செய்வது குறித்து நிர்வாகத்தின் மூலம் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும். போலி தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE