தமிழகத்தில் கடும் நிதிச் சிக்கலில் தவிக்கும் சர்க்கரை ஆலைகளை காப்பாற்ற வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ‘சிஸ்மா’ தலைவர் பழனி.ஜி.பெரியசாமி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடும் நிதிச் சிக்கலில் சிக்கியுள்ள தனியார் சர்க்கரை ஆலைகளைக் காப்பாற்ற அரசும் விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்க (சிஸ்மா) தலைவரும் தொழிலதிபருமான பழனி.ஜி. பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 9 தனியார் நிறுவனங்கள் 25 சர்க்கரை ஆலைகளை நடத்துகின்றன. இதில் ஒன்றைத் தவிர மீதமுள்ள 24 ஆலைகள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.

கடந்த மார்ச் வரை குறைந்தபட்சம் ரூ.4.74 கோடி முதல் ரூ.122.85 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை, நாடு முழுவதும் சுமார் ரூ.12,500 கோடி. உத்தரபிரதேசத்தில் மட்டுமே ரூ.8 ஆயிரம் கோடி. ஆந்திரா, கர்நாடகாவில் ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்தில் ரூ.400 கோடிதான் நிலுவை உள்ளது.

கரும்புக்கான ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் உயர்த்தி நிர்ணயிக்கின்றன. அந்த அளவுக்கு சர்க்கரை விலை அதிகரிக்கப்படுவதில்லை.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3.75 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு, இப்போது 2.7 லட்சம் எக்டேராக குறைந்துவிட்டது. இந்தாண்டு மேலும் 16 சதவீதம் குறையும் அபாயம் உள்ளது.

கடந்த 2011-12ம் ஆண்டில் 254.55 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 23.70 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. 2013-14ல் 138 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 12.50 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியானது. 2014-15ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி, 11.80 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளின் அரவைத் திறன் 250 லட்சம் டன் முதல் 300 லட்சம் டன்னாக இருக்கிறது. அதில் பாதியளவுதான் தற்போது அரவை நடக்கிறது. சர்க்கரை உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. அந்த அளவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சர்க்கரை விலை அதிகரிக்க வில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு குவிண்டால் (நூறு கிலோ) சர்க்கரை ரூ.3,600-க்கு விற்றது. பின்னர் ரூ.2,900 ஆக குறைந்தது. ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய ரூ.3,120 செலவாகிறது. இதனால், குவிண்டாலுக்கு சுமார் ரூ.300 வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தொழிலாளர்கள் கூலி, கரும்பு விலை உள்ளிட்ட செலவினம் 14 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், சர்க்கரை விலை 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இருந்தாலும், எங்களை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடாது என்பதால், நஷ்டத்திலும் ஆலையை தொடர்ந்து நடத்துகிறோம்.

சர்க்கரை ஆலைகளின் நிதிச் சுமை அதிகமாகியுள்ளதால், வட்டியில்லா கடன் கொடுத்து உதவ மத்திய அரசு முன்வந்துள்ளது. அந்தப் பணமும் கரும்பு நிலுவைத் தொகையாக விவசாயிகளுக்குத்தான் வழங்கப்படும். இத்தொகையை வேறு நோக்கத்துக்காக யாரும் பயன்படுத்த முடியாது. இத்தொகை சர்க்கரை ஆலைகளின் நிதிச் சுமையை ஓரளவுக்குத்தான் குறைக்கும்.

கடுமையான நிதிச் சிக்கலில் சிக்கியுள்ள சர்க்கரை ஆலைகளைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளும் விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும். இப்பிரச்சினையை அரசியல் ஆக்காமல், உள்நோக்கத்துடன் பார்க்காமல், பொருளாதார மேம்பாடு மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பழனி.ஜி.பெரியசாமி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்