காரைக்குடி அருகே 10 ஆண்டுகளாக மயானத்துக்காக பேராடும் ஆதிதிராவிடர்கள்

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: காரைக்குடி அருகே 10 ஆண்டுகளாக மயானத்துக்காக ஆதிதிராவிடர்கள் போராடி வருகின்றனர்.

மாத்தூர் ஊராட்சி காட்டுகுடியிருப்பு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்கள் வசித்து வருகின்றனர். இங்கு மயானம் இல்லாததால் பல ஆண்டுகளாக அங்குள்ள புதுக்கண்மாயில் இறந்தவர்களின் உடலை புதைத்து வருகின்றனர். மேலும் அக்கண்மாய்க்கு செல்லும் பகுதி தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களாக உள்ளன. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு அப்பகுதி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

இதையடுத்து புதுக்கண்மாய் அருகிலேயே உள்ள புறம்போக்கு இடத்தில் நிரந்தர மயானம் அமைத்து, அங்கு செல்வதற்கு பாதையும் ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லாத நிலையில் அவர்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித்திடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து காட்டுக்குடியிருப்பு மக்கள் கூறியதாவது: தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் என 10 ஆண்டுகளாக தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். அந்த சமயத்தில் மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அதன்பின்னர் நடவடிக்கை இல்லாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது எங்களுக்கு பெரும் போராட்டம் உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE