நிதி இல்லாததால் மதுரை மாநகராட்சி முடங்கிக் கிடக்கிறது: செல்லூர் ராஜூ

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: நிதி இல்லாததால் மதுரை மாநகராட்சி முடங்கிக் கிடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ள வார்டு பகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரை சந்தித்து மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, “மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் மன்னர்கால அகல்விளக்குகள் போல உள்ளன. ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை, அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இப்போது அதிமுக உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை, அறை, இருக்கை வழங்கப்படவில்லை. தமிழக அரசுக்கு மத்திய அரசு மரியாதை அளிக்கவில்லை என்று முதல்வர் பேசுகிறார். ஆனால், தமிழக அரசு உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மரியாதை அளிப்பதில்லை, இருக்கைகூட அளிப்பதில்லை.

உள்ளாட்சித் தேர்தல் நடக்காதபோது கூட நிர்வாகம் சிறப்பாக இருந்தது. மதுரை மாநகராட்சியில் திமுக உறுப்பினர்கள் கூட செயல்பட இயலவில்லை. காரணம் நிதி இல்லை. மதிமுக எம்.எல்.ஏ, துணை மேயர் ஆகியோர் மாநகராட்சியை கண்டித்து பதவி விலகப் போகிறேன் என்று பேசும் அளவிற்கு மாநகராட்சி செயல்பாடு உள்ளது. இது தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்துவோம். அதிமுக ஆட்சியில் 10 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை நிறைவேற்றினோம்.

ஆனால் இந்த 2 ஆண்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பார்க்கவே முடிவதில்லை. வணிகவரித்துறை அமைச்சர் தற்போது பவர்புல்லாக இருக்கிறார். இரு அமைச்சர்கள் இருந்தும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. தற்போது திமுக கூட்டங்களில் கூட அமைச்சர் பிடிஆரின் படங்கள் இடம்பெறுவதில்லை. தேர்தல் கூட்டணி குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது. யாரும் இன்னும் முடிவு செய்யவில்லை. எந்த கூட்டணி என்றாலும் மாறும். செந்தில்பாலாஜி குறித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் பேசவே இல்லை. பாஜகவுடன் கூட்டணி குறித்து எடப்பாடி முடிவு செய்வார்.” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE