செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் ஸ்லோமோஷனில் ரயில்வே மேம்பால பணி: 11 ஆண்டு கால இழுபறி முடிவுக்கு வருவது எப்போது?

By இரா.நாகராஜன்

திருவள்ளுர்: திருவள்ளூர் அருகே 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட செவ்வாப்பேட்டை ரோடு ரயில்வே மேம்பால பணி, இன்னும் முடிவுக்கு வராததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே செவ் வாப்பேட்டை ரோடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே இருந்த கடவுப் பாதை, நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருவதால் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.

இதன் காரணமாக, செவ்வாப்பேட்டை, திருவூர், தொழுவூர்குப்பம், அரண்வாயில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பணிக்குச் செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் சென்னை, பூந்தமல்லி, திருவள்ளூர், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கள் பணியிடம், பள்ளி, கல்லூரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை இருந்தது.

இதனால், செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக, தெற்கு ரயில்வேயும், மாநில நெடுஞ்சாலை துறையும் இணைந்து, ரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2011-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அந்த ஆண்டே ரயில்வே கடவுப் பாதை அகற்றப்பட்டு, ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கி 2 ஆண்டுக்குள் அதனை ரயில்வே நிர்வாகம் முடித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைத் துறை, செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. அப்பணியில், கடவுப் பாதையின் ஒருபுறமான திருவூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்தது.

11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, இன்னும் முடிவுக்கு வராத
செவ்வாப்பேட்டை ரோடு ரயில்வே மேம்பால பணி.

அதே நேரத்தில், கடவுப் பாதையின் மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலம் கையகப்படுத்து வதில் சிக்கல் நிலவுகிறது. அந்நிலங்களின் உரிமையாளர்கள், கையகப்படுத்தப்படும் தங்கள் நிலத்துக்கான இழப்பீடுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு, மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வந்தும் நெடுஞ்சாலைத் துறை இன்னும் பணியை தொடங்கவில்லை.

இப்படி, 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட செவ்வாப்பேட்டை ரோடு ரயில்வே மேம்பால பணி, இன்னும் முடிவுக்கு வராததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நாள்தோறும் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, செவ்வாப்பேட்டை எப்சிஇ காலனி பகுதியைச் சேர்ந்த ஆன்றியாஸ் கூறும்போது, ‘‘செவ்வாப் பேட்டை ரோடு ரயில்வே மேம்பால பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், திருவூர் மற்றும் அரண்வாயில்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையம் அருகே உள்ள, திருவூர் ஏரி நீர், தொழுவூர் ஏரிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக சுமார் 2 கி.மீ. க்கு மேல் சுற்றிக் கொண்டு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. மழை பெய்தால் அதற்கும் வாய்ப்பில்லை’’ என்றார்.

செவ்வாப்பேட்டை, ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளரான உத்தண்டராமன் இதுகுறித்து கூறும்போது, ’’ ரயில்வே மேம்பால பணியை இனியாவது தொடர்ந்து, துரிதமாக முடித்து திருவூர், அரண்வாயில் குப்பம் பகுதிகள் வழியாக பேருந்து வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

திருவூர் பகுதியை சேர்ந்த, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன் கூறும்போது, ‘‘மேம்பாலப் பணிக்கு தேவையான நிலத்துக்கான இழப்பீடுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அளித்து, பணியை மீண்டும் தொடங்கி துரிதமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

திருவூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் காமேஷ் கூறும்போது,’’ செவ்வாப்பேட்டை ரோடு ரயில்வே மேம்பால பணி முடியாததால், திருவூர் உள்ளிட்ட பகுதிகளில் விபத்தில் படுகாயமடைந்தோர், பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும் 108 ஆம்புலன்ஸ் நீண்ட தூரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக, எம்எல்ஏ மற்றும் எம்.பி.யிடம் பல முறை கோரிக்கை வைத்தும், போராட்டங்களை நடத்தியும் பணிகள் கிடப்பில் கிடைக்கின்றன’’ என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மாநில நெடுஞ்சாலை துறையால் பாலம் அமைக்கும் பணிக்கு தேவையான நிலங்கள் அனைத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கி, அதனை கையகப்படுத்துவதற்கான பணிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் நடந்து வருகிறது. அப்பணி விரைவில் முடிவுக்கு வரும்.

தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள பணிகளுக்கான மறுதிட்ட மதிப்பீடுக்கான அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, மறுடெண்டர் விடப்பட்டு மேம்பால பணி தொடங்கப்படும். அப்பணி தொடங்கி ஓராண்டுக்குள் முடிக்கப் படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்