வடகிழக்கு பருவமழைக்கு முன்பே சாலை, பாலம் பணிகளை முடிக்க வேண்டும் - அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே, நிலுவையில் உள்ள சாலை மற்றும் பாலப்பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைகளால் மேற்கொள்ளப்படும் சாலை மற்றும் பாலப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: தொழிற்சாலைகளுக்கான உள்கட்டமைப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருவதால், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இடம் கையகப்படுத்துதல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதி, உள் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறுசவால்களை நாம் எதிர்கொண்டாலும், அவற்றில் தீவிர கவனம் செலுத்தி, பிரச்சினைகளுக்கு இடம்தராமல், உலகளாவிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கவும், முதலீடுகளைப் பெறவும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

சில இடங்களில் தொய்வு: அந்த அடிப்படையில்தான், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. மாநில நலனுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சாலைகளும், பாலங்களும் தவிர்க்க இயலாத முக்கியத்துவத்தை பெற்றுள்ளன.

தமிழகத்தில் நடைபெற்று வரும்அனைத்து சாலை மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கடந்த மே 10-ம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. இதன் விளைவாக பல பணிகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில இடங்களில் தொய்வைக் காண முடிகிறது.

பொதுவாக, சாலை, பாலப் பணிகள் நடைபெறும் காலங்களில் உருவாகும் தற்காலிக சிரமங்கள், நிரந்தர வசதிக்காகத்தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும், தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டால், மக்கள் மேலும் சிரமத்துக்கு ஆளாவார்கள். அதனால் நம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு உரிய காலத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

போதிய நிதி ஒதுக்கீடு: தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், பணிகளை முடிக்க நிதி தடையாக இல்லை. தாமதத்துக்கு பொதுவான காரணம், நில எடுப்பு மற்றும் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில்ஏற்படும் பிரச்சினைகள்தான். இவற்றுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில், தலைமைச் செயலர், சம்பந்தப்பட்ட துறை செயலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.

தற்போது சென்னை சாலைகள்எத்தகைய இயற்கை பேரிடரையும் தாங்கும் அளவுக்கு, கட்டமைப்பு பெற்றதாக மாறியுள்ளது. இந்த வெற்றிக்கு அடிப்படை காரணம் துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பும், தொடர் ஆய்வுகளும் தான்.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே, நிலுவையில் உள்ள சாலை மற்றும் பாலப்பணிகளை முடித்து, மக்களின் இன்னல்களைப் போக்க வேண்டும்.விரைந்து செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும்.

மேலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பில் உள்ள பாலங்கள் மற்றும் புறவழிச்சாலை பணிகளை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இதற்குத் தேவைப்படும் நில எடுப்பு பணிகளை சம்பந்தப்பட்ட துறைகளோடு வருவாய்த் துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்தவேளையில், 50 ஆண்டுகள் கடந்து நிற்கும் சென்னை -அண்ணாமேம்பாலத்தை நினைவுகூர்கிறேன். சென்னை மாநகருக்கு அழகு சேர்க்கும் அண்ணா மேம்பாலத்தை கடந்த1973 ஜூலை 1-ம் தேதி அப்போதையமுதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார். 50 ஆண்டுகளைக் கடந்தும், அதன் கட்டுறுதி குறையாமல் இன்றும் பெருமை சேர்த்துக் கொண்டி ருக்கிறது.

அதேபோல், கத்திப்பாரா, பாடி, கோயம்பேடு சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள பாலங்கள் திமுக அரசின் சாதனைக்கு எடுத்துக்காட்டுகள். கடந்த சனிக்கிழமையன்று, திரு.வி.க. நகரில் ஸ்டீபன்சன் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் பாலத்தை திறந்து வைத்தேன். சென்னையில் மட்டுமல்ல; மாநிலம் முழுவதும் சாலைகள், பாலங்கள், திமுக அரசின் சாதனையை பறைசாற்றுகின்றன. இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE