கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா: ஆட்சியரிடம் கடிதம் அளித்ததால் பரபரப்பு

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் கணவரின் தலையீட்டை கண்டித்து 3 பெண் உறுப்பினர்கள் உள்பட 6 பேர் ராஜினாமா கடிதத்தை இன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சியில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் ராஜினாமா கடிதத்தை ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதாவிடம் இன்று அளித்தனர். இதில் பெண் உறுப்பினர்கள் எம்.தனம், பி.ஜெயலெட்சுமி, மா.பஞ்சு, மற்றும் மன்ற உறுப்பினர்கள் பாண்டியராஜன், தங்கச்சாமி, ஜெயக்கொடி ஆகிய 6 பேரும் ராஜினாமா கடிதங்களை ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதாவிடம் அளித்தனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூறியதாவது, “உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக ஜெயந்தி உள்ளார். ஆனால் அவரது கணவர் முத்துராமன் தான் தலைவர் போல் செயல்படுகிறார். முழுக்க முழுக்க நிர்வாகத்தில் தலையிடுகிறார். அவர் மீது புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், ஊராட்சி நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை. இங்கு 25 ஆண்டாக ஊராட்சி செயலராக உள்ள ஜெயபாலன் சர்வாதிகாரமாக செயல்பட்டு பலமுறைகேடுகளில் ஈடுபடுகிறார்.

மேலும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதால் எங்களது வார்டுகளில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. கட்டிட அனுமதி அளிக்கவும், விளைநிலங்களை வீட்டுமனையாக்கவும் லஞ்சம் பெறுகின்றனர். கூட்டம் நடத்தாமலே வீடுகளுக்கு சென்று கையெழுத்து வாங்குகின்றனர். கேள்வி கேட்கும் உறுப்பினர்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து புகார்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே எங்களது பதவிகளை ராஜினாமா செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE