செந்தில் பாலாஜி மீது காட்டும் அக்கறையை மக்கள் நலனில் காட்டத் தவறியது ஏன்? - தமாகா கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: “செந்தில் பாலாஜி விஷயத்தில் காட்டும் அக்கறையை மக்கள் நலனில் காட்டத் தவறியது ஏன்?” என்று ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றும் போது தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கை அழுகி அறுவை சிகிச்சை மூலம், அழுகிய கை அகற்றப்பட்டது. இதுபற்றி மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த குழந்தை 32வாரத்தில் குறை பிரசவத்தில் பிறந்திருக்கும் குழந்தை. பிறக்கும் பொழுதே காம்ப்ளிகேஷன் உடன் பிறந்திருக்கிறது. அதற்கான சிகிச்சை அளித்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

குழந்தை கை இழந்த விவகாரத்தில் அரசு நிச்சயம் பதில்கூற வேண்டும். குழந்தையின் தாய் ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைக்கு இல்லாத பிரச்சினை திடீரென எப்படி வந்தது என்று கேள்வி எழுப்புகிறார்? ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் இது போன்றுதான் அலட்சியமான போக்குடன் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அணுகுகிறார்கள்.

இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி பிரியா கால்பந்து விளையாட்டில் பயிற்சியின் போது ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த தவறான அறுவை சிகிச்சை காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலது கால் துண்டித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கையை இழக்க காரணமான திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்த ஆரம்பித்தபோதே திமுகவின் நாடகம் தொடங்கிவிட்டது. செந்தில் பாலாஜி விஷயத்தில் காட்டும் அக்கறையை மக்கள் நலனில் காட்டத் தவறியது ஏன்? இதனால் தான் அரசு மருத்துவமனையை நம்பாமல் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி மருத்துவம் பார்த்தீர்களோ?

காசு இருப்பவர்களுக்கு தனியார் மருத்துவமனை என்றாகிவிட்டால் காசு இல்லாதவர்களின் கதி என்ன? கையையும், காலையும் இழக்க வேண்டியதுதானோ? மக்களுக்கு விடியலை தருவோம் என்றுகூறி ஆட்சிக்கு வந்து இந்த பொழுது எப்பொழுது முடிவுக்கு வரும் என்று நினைக்கும் அளவுக்கு திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளது.

சுகாதாரத் துறையில் தொடர்ந்து இதுபோன்ற தவறுகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பாதிப்பு அரசுக்கோ அல்லது அந்தத் துறையைச் சார்ந்த அமைச்சருக்கோ இல்லை. சாதாரண பொது மக்களுக்குத்தான். மருத்துவத்துறையை கவனிக்க வேண்டிய அமைச்சர் உதயநிதி நடித்துள்ள படத்தை பார்ப்பதும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று மக்களோடு நடை பயிற்சி மேற்கொள்வதும் தனது பொழுதுபோக்காக உள்ளார்.

எனவே, சுகாதாரத் துறையை வழிநடத்த முடியாத சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்