ஆளுநர் ரவியை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழாக்கம்:
அரசியல் சட்டத்தின்கீழ் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் இல்லையென்று தெரிந்திருந்தும், ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்தார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அதைக் கிடப்பில் போடுவதாக உங்களுக்குக் கடிதம் அனுப்பினார். அவருடைய நோக்கம் என்ன என்று கருதுகிறீர்கள்?
எனது தலைமையிலான தி.மு.க. அரசு, நிம்மதியாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடாமல் தடுப்பதே ஆளுநரின் உள்நோக்கம். இரண்டு ஆண்டுகளாக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்து - இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காண்பித்துள்ளோம். இதை எல்லாம் ஆளுநரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் ஆளுநருக்கு துளியும் கிடையாது. அதனால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக, தமிழ்நாடு அரசுக்கு எதிராக “விதண்டாவாதம்” பேசி வருகிறார். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்..
புதிய ஒப்பந்தங்களைப் போடுவதற்காகவும், உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு நான் சென்றேன். அந்த நேரம் பார்த்து, 'நேரில் அழைப்பு விடுப்பதால் முதலீடுகள் வராது' என்று இவர் பேசுகிறார். இதன் மூலமாக அவர் என்ன சொல்ல விரும்புகிறார்? முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களிடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் கிடைத்துவிடக் கூடாது என நினைக்கிறார். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி விடக் கூடாது என நினைக்கிறார். அதன் வெளிப்பாடுதான் அவரது இந்த பேச்சுகள்.
» கொடைரோடு | கேட்டை அடைக்க விடாமல் தண்டவாளத்தை கடந்தனரா திமுகவினர்?
» கொடைக்கானலில் தக்காளி ரூ.150-க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி
நாள்தோறும் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசுவது, நல்லாட்சி இங்கு நடப்பதைப் பார்த்து அவர் எரிச்சல் அடைவதைக் காட்டுகிறது. அவரது ஆதாரமற்ற - அரசியல் சட்டத்தை மீறிய பேச்சுகள், நடவடிக்கைகள் சமூக சலசலப்பை ஏற்படுத்துவதாக - சமூக நல்லிணக்கத்தை சிதைப்பதாக அமைந்துள்ளன. தனக்கு எந்த அதிகாரமும் கிடையாது, அரசியல்சட்டப்படி தான் ஒரு நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பது அவருக்குத் தெரியும். தெரிந்தே, அவர் தமிழ்நாட்டு மக்களுடன் - தமிழ்நாட்டின் நலனுடன் தனது விபரீத விளையாட்டைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்.
ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் ஆளுநர் செயல்படுகிறார் என்பதே பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அவருடைய இரண்டாவது கடிதத்தைப் பார்க்கும் போது, உள்துறை அமைச்சகத்தையோ, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரையோ(அட்டர்னி ஜெனரலையோ) கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஒன்றிய அமைச்சகம் சொல்லிச் செய்கிறாரா, இல்லையா என்பதற்குள் நான் போகவிரும்பவில்லை. அவராகச் செய்தாலும், ஒன்றிய அரசு சொல்லிச் செய்தாலும், ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் - நீக்கும் அதிகாரம் இல்லை என்பதே அரசியல் சட்டம். அவரை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால், தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த போது அதை அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சித்தீர்கள். ஆனால் நீங்களே ஒருகாலத்தில் வழக்குகளில் சிக்கிய அ.தி.மு.க. அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இது ஒரு முரண்பாடான நிலைபாடு என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
இத்தகைய கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வைப்பது என்பது அரசியல் நடவடிக்கை. ஆனால் ஆளுநர் அரசியல்வாதியாக மாறக் கூடாது. அவர் அரசியல் சட்டபடிதானே நடக்க வேண்டும். அப்படி அவர் நடக்காததுதான் எங்களது சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கிறது. செந்தில் பாலாஜியை பாஜக குறிவைப்பதைப் போலவே ஆளுநரும் செயல்படுகிறார். அதனைத்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
செந்தில் பாலாஜியின் கைதே சட்டவிரோதமானது என்று அவரது மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார். அமலாக்கத்துறையை அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக பயன்படுத்துகிறது என்பது எங்களது பகிரங்க குற்றச்சாட்டு. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உள்ளான அதிமுக அமைச்சர்களை அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் கைது செய்யவில்லை; ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கியெறிந்த பிறகும் கைது செய்யவில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு செந்தில் பாலாஜியை வருமானவரித் துறை ரெய்டு செய்கிறது, அமலாக்கத்துறை மனிதநேயமின்றி கைது செய்கிறது. நேர்மையாக செயல்பட வேண்டிய அந்த அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.
9 ஆண்டுக்கு முந்தைய ஒரு புகாருக்காக - திடீரென்று ரெய்டு நடத்தி - 18 மணி நேரம் அடைத்து வைத்து - சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர் அமைச்சராக இருப்பவர். பகிரங்கமாக வெளியில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தவர் தானே. அப்படி இருக்கும் போது அடைத்து வைத்து ஒரே நாளில் வாக்குமூலம் வாங்க வேண்டிய அவரசம் எங்கே வந்தது?
இதயத்தில் நான்கு அடைப்பு இருக்கிறது, அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அது “நாடகம்” என இதயத்தில் ஈரமில்லாமல் வாதிடுகிறது அமலாக்கத்துறை. முதலில் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துமனை மருத்துவர்கள் கூறியதை நம்ப மறுத்தது. பிறகு தனியார் மருத்துவமனைக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, அமலாக்கத்துறையின் இந்த மனித நேயமற்ற செயலையும், “செலக்ட்டிவ்” கைதையும்தான் அதிகார துஷ்பிரயோகம் என்கிறோம். எதிர்க்கிறோம். எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்பதே எங்களது நிலைப்பாடு. மருத்துவமனையில் இருப்பதால் துறை இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார். அவ்வளவுதான்! மற்றபடி நேர்மையான- சட்டத்திற்குட்பட்ட விசாரணையை நாங்கள் எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. சட்டப்படியே சந்தித்து வெற்றி கண்டிருக்கிறோம்.
அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்ததுமே நீங்களே முன்வந்து தார்மீக அடிப்படையில் அவரை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறதே?
நாடு முழுவதும் குற்ற வழக்குகள் – ஒன்றல்ல, பல இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் - எம்.பி.க்கள் மாநிலங்களிலும் ஒன்றிய அளவிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். வழக்கில் தண்டிக்கப்படும் வரை முதலமைச்சராக பதவியில் நீடித்தவர்தான் அம்மையார் ஜெயலலிதா. பாஜகவின் ஒன்றிய அமைச்சரவையிலேயே எத்தனை பேர் மீது குற்றவழக்குகள் இருக்கின்றன என்பது தேர்தல் அபிடவிட்டை பார்த்தாலே தெரியும். ஆகவே “தார்மீக அடிப்படை” என்பது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. பாஜக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தும் கிளை அமைப்பாக அமலாக்கத்துறை மாற்றப்பட்ட பிறகு - நான் எடுத்துள்ள நிலைப்பாடே சரியானது ஆகும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது அரசியல் எதிரிகளை பழி வாங்க, அமலாக்கத்துறையை பாஜக பாய்ச்சிய சம்பவங்களை நினைவூட்டிப் பாருங்கள். நான் எடுத்த நிலைப்பாடு சரியானது என நீங்களே சொல்வீர்கள். இப்படி நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், பாஜகவில் சேர்ந்த பிறகு அவர்கள் மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை நினைவூட்டிப் பாருங்கள். நான் எடுத்த நிலைப்பாடே சரியானது என நீங்களே சொல்வீர்கள்!இது செந்தில் பாலாஜி என்ற ஒரு தனிப்பட்ட அமைச்சர் குறித்த பிரச்சினை மட்டுமல்ல. இது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், உரிமைகள் குறித்த பிரச்சினை ஆகும். இது எங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் சம்பந்தப்பட்டது ஆகும்.
செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கினார்கள். இது தொடர்பாக நீங்கள் செந்தில் பாலாஜியைக் கண்டித்தீர்களா?
அது தவறான செயல் தான். அதனை நான் கண்டித்தேன். அந்த தகவல் கிடைத்ததும், உடனடியாக அனைவரையும் காவல்துறை கலைத்தது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு தரப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களை கைது செய்துள்ளது இந்த அரசு. அதை பாஜகவின் துணை அமைப்பாக பயன்படுத்தப்படும் வருமான வரித்துறையும் மறைக்கிறது. பத்திரிக்கையாளர்களாகிய நீங்களும் மறைக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையேயான உறவு மிகவும் சிக்கலான நிலைமைக்குச் சென்று விட்டது. இத்தகையச் சூழலில் ஆளுநருடன் இணைந்து செயல்படுவது சாத்தியமா? கூட்டணிக் கட்சிகள் எல்லோமே ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நீங்களும் அதை வலியுறுத்துவீர்களா?
ஆளுநர் ரவியை இங்கிருந்து மாற்றுவது மட்டுமல்ல, ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு ஆகும்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக சற்றும் தளர்வில்லாத நிலைபாட்டை எடுத்துப் பேசி வருகிறீர்கள். கட்சிகளை அணி திரட்டுகிறீர்கள். அதற்காகத்தான் உங்கள் அரசையும் அமைச்சர்களையும் ஒன்றிய அரசு குறி வைக்கிறதா?
ஆமாம்! அதுதான் உண்மை. அகில இந்திய ரீதியில் பாஜகவுக்கு எதிரான அணியை கட்டுவதில் திமுக முனைப்பாக இருக்கிறது. அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை வந்து சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். பாஜக - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று என்னிடம் சிலர் சொன்ன ஆலோசனையை நான் முழுமையாக நிராகரித்து விட்டேன். காங்கிரசையும் உள்ளடக்கிய ஒரு அணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் சொல்லி விட்டேன். இவை ரகசியத் தகவல்கள் அல்ல, பொதுமேடைகளில் இதனைச் சொல்லி விட்டேன்.
இப்போது பாட்னாவில் நடந்த கூட்டத்திலும் தேர்தல் அணிகளை எப்படி அமைப்பது என்பதை நான் விளக்கிச் சொல்லி இருக்கிறேன். மாநில அளவில் பெரிய கட்சி தலைமையில் கூட்டணி அல்லது தொகுதி பங்கீடு, அல்லது பொதுவேட்பாளர் என மூன்று விதமாக தேர்தலை சந்தித்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறேன். இதைத்தான் நான் ஆலோசனையாகச் சொன்னேன் என்பதையும் நிருபர்கள் கூட்டத்தில் விளக்கி இருக்கிறேன். இவை அனைத்தும் பாஜகவை எந்தளவுக்கு கோபப்படுத்தி இருக்கிறது - அவர்களுக்கு “பாட்னா பயம்” எப்படி வந்திருக்கிறது என்பதை மத்தியப் பிரதேசத்தில் போய் பிரதமர் மோடி அவர்கள் திமுகவையும் தலைவர் கருணாதியையும் பழித்துப் பேசியதைப் படித்தால் உணரலாம். இதனால்தான் திமுக அமைச்சர்களை குறி வைக்கிறார்கள்.
திமுக அமைச்சர்களைக் குறி வைப்பதால், நாங்கள் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. பா.ஜ.க.வின் வன்மத் தாக்குதலுக்குப் பிறகுதான் எங்கள் நிலைப்பாடுகளில் வேகம் அதிகமாகி இருப்பதாக நான் நினைக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கெடுக்க பாஜக எந்தவிதமான சூழ்ச்சிகளிலும் ஈடுபடும். அதன் ஒருபகுதியைத்தான் மகாராஷ்டிராவிலும் இப்போது பார்க்கிறோம். பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை எல்லாம் மக்கள் மவுனமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களின் மவுனத்தை தங்கள் மீதான பயம் என நினைத்த பாசிசவாதிகள் அனைவரும் வீழ்ந்ததுதான் வரலாறு. ஜனநாயகத்திற்கு, வாக்களிக்கும் மக்கள்தான் பாதுகாப்பு கவசம். அதுவே பலம்! எனவே, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்க பாஜக செய்யும் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது. மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகள் கூட்டணி அமைப்பதையும் - வெற்றி பெறுவதையும் - இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படப் போவதையும் இனி பாஜகவால் தடுக்க முடியாது.
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடியை முன்னிறுத்துகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஏற்புடைய ஒரு தலைவரை முன்னிறுத்த எதிர்க்கட்சிகளால் இதுவரை முடியவில்லை. அத்துடன் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி இன்னும் உருவாகாத நிலையில், அக்கட்சியை அடுத்தத் தேர்தலில் வீழ்த்த முடியுமா?
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியே, இன்னும் நரேந்திர மோடியை முன்னிறுத்தவில்லை. அவரைத் தான் முன்னிறுத்துவார்கள் என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டு கேட்கிறீர்கள். இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்! பொதுவாக கூட்டணிக்கு தலைவர் இருப்பதை விட, இலக்கு இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சிக் கொள்கை, அரசியல் சட்டம் என அனைத்திற்கும் எதிராகச் செயல்படும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவோம் என்ற கருத்தியலே எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago