காரைக்காலில் மாங்கனித் திருவிழா கோலாகலம்: பக்தி பெருக்குடன் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்ட பக்தர்கள்

By செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பக்தி பெருக்குடன் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்படும்.

நிகழாண்டு விழா ஜூன் 30-ம் தேதி ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை அம்மையார் கோயிலில் புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல்யாணம், இரவு கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு, பரமதத்தர்-புனிதவதியார் முத்து சிவிகையில் வீதியுலா நடைபெற்றது.

தொடர்ந்து, நேற்று அதிகாலை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதன்பிறகு, பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு (கடைத் தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில்) வரும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர், சிறப்புமிக்க நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா நடைபெற்றது.

இதையொட்டி, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன், கைலாசநாதர் கோயில் வாயிலில் பவழக்கால் சப்பரத்தில் காலை 10.15 மணிக்கு எழுந்தருளினார். அப்போது, கோயில் வாயிலில் நீண்டவரிசையில் காத்திருந்த பக்தர்கள் மாங்கனிகளை இறைவனுக்குப் படைத்து தரிசனம் செய்த பின்னர் 11.15 மணியளவில் கைலாசநாதர் கோயில் வாயிலில் இருந்து வீதியுலா புறப்பாடு தொடங்கியது. வேதபாராயணங்கள் முழங்க, நாகசுரம், சிவபெருமானுக்குரிய ராஜ வாத்தியங்கள் இசைக்க வீதியுலா நடைபெற்றது.

கைலாசநாதர் கோயில் வீதி, பாரதியார் சாலை, மாதா கோயில் வீதி, லெமர் வீதி வழியாக மாலை வரை நடைபெற்ற வீதியுலாவில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வீதிகளில் மிக நீண்ட வரிசையில் நின்று, இறைவனுக்கு மாங்கனிகளை படைத்துச் சென்றனர். விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

வீதியுலாவின்போது, பவழக்கால் சப்பரம் ஓர் இடத்திலிருந்து அடுத்த இடத்துக்கு நகர்ந்த பின்னர், பின்னாலிருக்கும் சாலைகள், வீடுகள், கடைகள் மற்றும் மாடிப்பகுதிகளில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டனர். அந்த மாங்கனிகளை இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகக் கருதி பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

விழாவில், புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, ஆட்சியர் அ.குலோத்துங்கன், எஸ்எஸ்பி மணிஷ், அறங்காவல் வாரியத் தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை தரிசித்தனர்.

இன்று (ஜூலை 3) அதிகாலை 5 மணிக்கு இறைவன், அம்மையாருக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வு, ஆக.1-ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆகியன நடைபெறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE