இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - 15 நிலையங்களில் வழித்தடம் மாறி செல்லும் வசதி

By செய்திப்பிரிவு

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஆலந்தூர், பரங்கிமலை, மயிலாப்பூர் உள்ளிட்ட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறி செல்லும் வசதி அமைய உள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.)3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. 50-க்கும்மேற்பட்ட இடங்களில் உயர்மட்டபாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி அமையவுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 2026-ம் ஆண்டு முதல் படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, தற்போதுள்ள பேருந்து, ரயில் நிலையங்கள், ஏற்கெனவே இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக அமைக்கப்படுகிறது. குறிப்பாக, மாதவரம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், போரூர், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சிஎம்பிடி, திருமங்கலம், வடபழனி, நந்தனம், பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்துக்கு மாறி செல்லும் வசதிகள் இருக்கும். மேற்படி வசதிகளுடன் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE