94 குழந்தைகள் உயிரிழந்த கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீ விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தருவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
ஜூலை 16, 2004-ல் நிகழ்ந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து குறித்து விசாரிக்க, அன்றைய தமிழக அரசு, நீதிபதி சம்பத் கமிஷனை நியமித்தது.
சம்பத் கமிஷன் தனது அறிக்கையில், “எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் 900 மாணவர்கள் இங்கு படிப்பதற்கு அனுமதி அளித்தது குற்றம். இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு” என்று தெரிவித்தது.
அந்த அறிக்கையை, சிறு மாற்றமும் செய்யாமல் அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்தபோது, ஏற்கெனவே ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுவிட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சாசனம் பிரிவு- 21 மக்களின் உயிர் வாழ்க்கைக்கும் மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கும் அரசே பொறுப்பு என்கிறது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை கொடுக்கும் பொறுப்பு அரசுக்கே உள்ளது என்பதை வலியுறுத்தி இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010-ல் வழக்குத் தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, அதே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 24.4.2014 அன்று நீதிபதி பால்வசந்தகுமார், சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, 2 வாரத்துக்குள் நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
அதை தமிழக அரசு நிறை வேற்றாததால், பெற்றோர் தரப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கேட்கப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ஜோசப் குரியன், ரோகின்டன் எப்.நாரிமன் அமர்வு முன்பு இன்று (ஜூலை 30) நடைபெறவுள்ளது. இதே நாளில்தான், பத்தாண்டு கால நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு தஞ்சை அமர்வு நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘தலா ரூ.25 லட்சம் தரவேண்டும்’
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் வழக்கு தொடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.தமிழரசன் தெரிவித்ததாவது: விபத்துக்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் தான் காரணம். எனவே, அரசுதான் இழப்பீடு தரவேண்டும். தமிழக அரசு மேல் முறையீடு செய்தது அநீதியானது. இதற்கு முன்பு நடைபெற்ற விபத்துகளில் இதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன. 1989-ல் ஜாம்ஷெட்பூரில் தீ விபத்தில் டாடா பள்ளியில் படித்த 69 குழந்தைகள் இறந்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு குழந்தைக்கு ரூ.3.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதன்படி, கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் தமிழரசன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago