கொடைரோடு | கேட்டை அடைக்க விடாமல் தண்டவாளத்தை கடந்தனரா திமுகவினர்?

By என்.சன்னாசி

மதுரை: திண்டுக்கல் அருகே கடந்த 30 ஆம் தேதியன்று நெல்லை - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லவிருந்தபோது ரயில்வே கேட்டை மூட கேட் கீப்பர் முயன்றபோது, அவரைத் தடுத்து தங்களது கட்சி எம்.பி, எம்எல்ஏ கார்கள் செல்ல திமுகவினர் வழிவகை செய்ததாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் பற்றி விசாரணை நடைபெறுவதாகவும், தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட கேட் கீப்பர் மூலம், காவல்துறை மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகிலுள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சி, ஜெகநாதபுரம் 13வது வார்டு நாயக்கர் காலனியில் சிமெண்ட் சாலை பணிக்கான பூமி பூஜை மற்றும் அரசு நிகழ்ச்சி கடந்த 30ம் தேதி மாலை நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்ட திமுக செயலர் ஐபி .செந்தில் குமார் எம்எல்ஏ, எம்.பி வேலுச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் காரில் சென்றனர். கொடைரோடு- அம்மா பட்டி ரயில்வே கேட்டை அவர்கள் சுமார் 6.20 மணிக்கு கடக்க முயன்றனர். அப்போது, நெல்லை- மும்பை செல்லும் அதிவிரைவு தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக சிக்னல் கொடுக்கப்பட்டு அலாரம் எச்சரிக்கை தகவல் ஒலித்தது.

கேட் கீப்பரும் ரயில்வே கேட்டை அடைக்கும் பணியில் ஈடுபட்டார். அந்நேரத்தில் டூவீலர், வாகனங்களில் அங்கு வந்த திமுகவினர், கேட்டை அடைக்கவிடாமல் தடுத்ததாகத் தெரிகிறது. இதனால், கேட் கீப்பர் கேட்டை பாதியில் நிறுத்தி யுள்ளார். இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ, எம்.பி மற்றும் அக்கட்சி நிர்வாகிகளின் கார்கள் என, சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. இவர்களைத் தொடர்ந்து பிற வாகனங்களும் பின் தொடர்ந்ததால் கேட் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திடீரென தண்டவாள பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று சிக்கிக் கொண்டது.

இதை அறிந்த அப்பகுதியினர், கேட் கீப்பர் மற்றும் அங்கு வந்த காவல் துறையினர் பதற்றம் அடைந்தனர். ரயில் வருவதற்கு சில நிமிடமே மட்டுமே இருந்த நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் கேட் கீப்பர் திகைத்தார். உடனே அங்கு வந்த அம்மையநாக்கனூர் காவல் நிலைய எஸ்ஐ கருப்பையா என்பவர் துரிதமாக செயல்பட்டு வாகனங்களை அப்புறப்படுத்தினார். இதன்பின், அவசரமாக ரயில்வே கேட் மூடப்பட்டது. கேட் மூடிய ஒருசில நிமிடத்தில் அதிவேக நெல்லை- மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் அந்த ரயில்வே கேட்டை கடந்தது.

இதன்பிறகே அங்கிருந்த பொதுமக்கள், காவல் துறையினர், கேட்கீப்பரும் நிம்மதி அடைந்தனர். சிக்னல் கிடைத்து அலாரம் ஒலித்த நிலையில், வலுக்கட்டாயமாக ரயில்வே கேட்டை அடைக்க விடாமல் தண்டவாளத்தை கடந்த திமுகவினரால் பெரிய விபத்து ஏற்படும் சூழல் இருந்ததாகவும், காவல் துறையின் துரித நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது எனவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகை யில், ''அந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட கேட் கீப்பர் மூலம், காவல்துறை மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE