தருமபுரி | சாலை விரிவாக்கப் பணியில் இடிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னம்மான கல் மண்டபம்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி அடுத்த ராஜாப்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணியின்போது இடிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமான கல் மண்டபத்தை மீட்டு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தருமபுரி-அரூர் நெடுஞ்சாலையையொட்டி ராஜாப்பேட்டை பகுதியில் கல் மண்டபம் ஒன்று அமைந்திருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தருமபுரி-அரூர்-திருவண்ணாமலை சாலை விரிவாக்கப் பணிக்காக இந்த கல் மண்டபம் கடந்த ஜனவரி மாதத்தில் இடித்துத் தள்ளப்பட்டது. அப்பகுதியில் சாலைப் பணிகள் நடந்தபோது வரலாற்றுச் சின்னமான அந்த கல் மண்டபத்தை காக்க வேண்டுமென தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன் கோரிக்கை வைத்திருந்தார்.

இருப்பினும், அந்த மண்டபம் இடிக்கப்பட்டு அப்பகுதியில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இடிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமான கல் மண்டபத்தை மீட்டு அருங்காட்சியகம் அல்லது அரசுக் கல்லூரியில் நிறுவி பாதுகாக்க வேண்டும் என பேராசிரியர் சந்திரசேகரன் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது: ராஜாப்பேட்டை பகுதியில் சாலையோரம் அமைந்திருந்தது பாண லிங்க வகை கல் மண்டபம். ஜமீன் நடைமுறை காலத்தில் ராஜாப்பேட்டை பகுதியை ஆட்சி செய்த அரசர் ஒருவரின் நினைவாக இந்த கல் மண்டபம் கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வில் தெரிய வருகிறது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நாற்கோண வடிவிலான இந்த மண்டபம் நாயக்கர் கால வடிவமைப்பைக் கொண்டது.

மன்னராட்சி காலத்திலேயே இந்த மண்டபத்தையொட்டி பிரதான சாலை அமைந்திருந்ததற்கான சாட்சியாக இந்த மண்டபம் இருந்து வந்தது. நெடுந்தூர பயணம் செல்வோர் ஓய்வெடுக்கவும், இரவில் தங்கிச் செல்லவும் இந்த மண்டபம் பயன்பட்டு வந்துள்ளது. இந்த மண்டபத்திலோ, அருகிலோ கல்வெட்டு எதுவும் கிடைக்காததால் மண்டபம் தொடர்பான ஆழமான தகவல்களை அறிய முடியவில்லை.

ஆனாலும், பெருவழியையொட்டி அன்றைய நாளில் இதுபோன்ற மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலின் மூலம், ராஜாப்பேட்டை கல் மண்டபம் அன்றைய வணிக வழியை கணிக்க உதவும் சாட்சியாக நின்றிருந்தது. இவ்வாறான ஆய்வுகளை காலம் தோறும் மேற்கொள்பவர்களுக்கு இது போன்ற வரலாற்று சுவடுகள் பேருதவியாக அமையும். தொடர் ஆய்வுகளின் பலனாக என்றேனும் இதுபோன்ற சுவடுகள் தொடர்பான தகவல்கள் முழுமையாக வெளிவரும்.

அதற்கு தொல்லியல் சின்னங்களின் இருப்பு அவசியமாக உள்ளது. வரலாற்றுச் சுவடுகளை அதன் பூர்வ இடங்களில் பராமரிப்பதே பொருத்தமாக இருக்கும். இருப்பினும், வளர்ச்சிப் பணி நோக்கில் ராஜாப்பேட்டை கல் மண்டபம் இடிக்கப்பட்டு விட்டது. சிற்பங்களுடன் கூடிய இந்த மண்டப கற்களை மீட்டு அருங்காட்சியகம் அல்லது அரசு கலைக் கல்லூரி போன்ற இடங்களில் நிறுவினால் அழிவற்ற நிலையை அடையும். மேலும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் தகவல்களை அளிக்கும் நேரடி சாட்சியாக அமையும்.

தருமபுரி மாவட்டம் அதிக வரலாற்றுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனாலேயே இங்கு வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை இல்லையோ என்ற வருத்தமும் எழுகிறது. எனவே, வரலாற்று ஆர்வலர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ராஜாப்பேட்டை கல் மண்டபம் உட்பட கவனிப்பாரற்று கிடக்கும் வரலாற்றுச் சின்னங்களை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்