சென்னை: "இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவில் காணொளி மூலமாக கலந்துகொண்டு உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தாய் தமிழ்நாட்டின் மீது பற்றும், திராவிட மாடல் ஆட்சியின் மீது நம்பிக்கையும் கொண்டு எனக்கு இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
09.01.20023 அன்று நடந்த உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நீங்கள் நடத்தியபோது, அதிலும் காணொளி மூலமாக நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். FeTNA அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசின் MSME துறையின் கீழ் இயங்கக்கூடிய டான்செம் நிறுவனம் அந்த மாநாட்டை நடத்தியது. உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள் நம் தமிழ்நாட்டில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டும் அல்லாது அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.
இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக, அமெரிக்க தமிழ் நிதியம் என்ற அமெரிக்கவாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலமாக ரூ.10 கோடி அளவுக்கு தமிழ்நாட்டின் தொடக்கநிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் புதுயுக தொழில் முனைவுகளில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்குபெற அது ஊக்கமளிப்பதாக அமைந்தது. அந்த வகையில், FeTNA அமைப்பானது கூடி களையும் அமைப்பாக இல்லாமல், கூடி உழைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய FeTNA அமைப்பும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும், இணைந்து நடத்தும் தமிழ் விழாவுக்கு வருகைதந்துள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
அமெரிக்கவாழ் தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் அங்கு கூடியிருக்கிறீர்கள். தமிழகத்திலிருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்திருப்பதாக நான் அறிகிறேன். அந்த வகையில் உலகத் தமிழ்ச்சங்கமாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது. இது தமிழ் விழா. தமிழ் எப்போதும் வாழவே வைக்கும். வாழவைத்துக் கொண்டு இருக்கிறது. "தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர், தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர், தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர், தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்" என்று புரட்சிக் கவிஞர் பாடினார்.
தமிழ் என்பது நமக்கு மொழியாக மட்டுமல்ல, அமுதமாக, உயிராக, நம்மை வாழவைக்கக்கூடிய மண்ணாக இனிமை தரும் மணமாக, இளமைக்கு மருந்தாக, போராட்டக் களத்துக்கு வாளாக இருக்கிறது. அதனால்தான் தமிழ் என்றால் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். இனமான உணர்ச்சி அடைகிறோம். மொழியின் பெயரை தனது பெயராக வைத்துக்கொள்வதில் முன்னோடி இனம் நாம்தான். தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்ச்செல்வி என்று பெயர் வைத்துக் கொண்டவர்கள் 18 வயதுக்கு மேல் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இருப்பதாக ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கணக்கிட்டு கூறியிருக்கிறார். குழந்தைகளின் பெயரையும் சேர்த்தால் இது இன்னும் அதிகமாகும்.
மொழிக்காக தம் தேக்குமர தேகத்தை தீக்கிரையாக கொடுத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம். கடல்கடந்து வந்தபிறகும், தமிழ் மொழிக்காக விழா எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், மொழி என்பது நம்மைப் பொருத்தவரை எழுத்தாக இல்லை, ரத்தமாக இருக்கிறது. அந்த உணர்வோடுதான் நாம் கூடியிருக்கிறோம்.
தொன்மை தமிழரின் பெருமை என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகம் தோன்றியதைக் கணிக்க முடியாதவாறு, தமிழின் தோற்றத்தையும் தமிழினத்தின் தோற்றத்தையும் கணிக்கமுடியாத அளவுக்கு தொன்மையான வரலாறு நமக்கு உண்டு.
2ம் உலகத் தமிழ் மாநாட்டுக்கு 1968ம் ஆண்டு, உலகம் முழுவதும் இருந்து அறிஞர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களிடம் அன்றைய முதல்வர் அண்ணா பேசினார். சென்ற காலத்தை சிந்தை செய்யும்போது உண்மையான ஒரு பெருமித உணர்ச்சியையும், வருங்காலத்தை எண்ணும்போது இடையறாத ஒரு நம்பிக்கையையும் இன்றைய இன்னல்களுக்கு இடையிலும் தமிழர்களின் உள்ளத்திலே இவ்விழாவின் நெகிழ்ச்சியை ஏற்றிவைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. வரலாற்றுக் காலத்துக்கு முன்பு தொட்டு வளமார் பண்பாடும் உயர் நாகரிகமும் வழிந்த ஒரு நாட்டில் இத்தகைய வெற்றியினை நாம் எதிர்பார்த்ததே என்றார் அண்ணா.
அதனால்தான், இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்து செயல்பட்டு வருகிறோம். திமுக ஆட்சி அமைந்ததும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் பொது ஊழிக்கு முன் 6ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதும், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக நாம் விளங்கினோம் என்பதையும் கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது. அதேபோல், சிவகளையில் முதுமக்கள்தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் பொது ஊழிக்கு முன் 1155 என கண்டறியப்பட்டுள்ளது.
தன்பொருநை என்றழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களான கொந்தகை, அகரம், மணலூர், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, தருமபுரி மாவட்டம் பெரும்பாளை ஆகிய 7 இடங்களில் விரிவான ஆய்வுகள் நடந்துகொண்டு வருகிறது.
கீழடிக்கு அருகில் அகரம் அகழாய்வு தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர்செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதும், தேக்கிவைக்கப்பட்ட நீர் நிலைகளிலிருந்து இந்நீர் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த பொருளானது பொது ஊழிக்கு முன் 1615ம் ஆண்டுக்கும் பொது ஊழிக்கு முன் 2172ம் ஆண்டுக்கும் இடைப்பட்டது என காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, காலத்தால் முந்தையது மயிலாடும்பாறைதான். இப்படி ஒவ்வொரு ஆய்வாக வரவர தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணனின் "ஒரு பண்பாட்டின் பயணம்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். அது புத்தகம் அல்ல, தமிழர்களின் பண்பாட்டு கருவூலம்.
சிந்து பண்பாடு என்பது 5000 ஆண்டுகள் பழமையானது. அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ்மொழி. வாழ்ந்த தமிழர்கள் சங்ககால தமிழர்களின் மூதாதையர் என்பதை அவர் நிறுவியிருக்கிறார். இன்றைக்கும் நமது பயன்பாட்டில் இருக்கும் கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், தொட்டி, பட்டி, பள்ளி, காவேரி, பாண்டியன், குமரன், மதுரை, வன்னி, வேள், ஆகிய சொற்கள் எல்லாம் சிந்து பண்பாட்டின் வழியான குஜராத், மராட்டியம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இருக்கிறது என்பதை அவர் நிறுவியிருக்கிறார். தமிழர்களின் பண்பாட்டு பெருமை இது.
சிந்துவெளியில் காளைகள்தான் இருந்தன. இது திராவிடச் சின்னம். சிந்துவெளி முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கின்றன. இவை அனைத்து தமிழரின் தொன்மையை பாறைசாற்றுவதாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகள் அனைத்தையும், உலக ஆய்வாளர்களின் அளவுகோலுடன் மெய்ப்பித்து அவர்களை ஏற்றுக்கொள்ள வைத்து வெளியிடும் அரசாக அமைந்துள்ளது.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும். இந்தியாவிலேயே அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதிலும் வைகையை சுற்றித்தான். தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலக அளவில் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது. தமிழர் அல்லது தமிழ்நாட்டார் முன்னேற்ற வினையை கொள்ளும் வகையால் சொல்லும் வாயெல்லாம் செய்து வருவது திமுக அரசே என்று 1971ல், என்று எழுதினார் திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர். அப்படி பாராட்டும் அரசாக இன்றைய திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
கீழடி அகழாய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60க்கும் மேற்பட்ட தமிழி எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில், குவிரன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது வெளிப்படுகிறது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத்தமிழர்களும் பொதுமக்களும் கண்டு களிக்கும் வகையில், 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் ச.அடி பரப்பளவில், 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கீழடி அருங்காட்சியகம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் காண்பதற்கு நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும்" என்று முதல்வர் பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago