சென்னை: தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை அடுத்த 3 நாட்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையிலான தென்பெண்ணை ஆற்றுநீர் சிக்கலைத் தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை ஜூலை 5&ஆம் நாளுக்குள் அமைப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த தீர்ப்பாயத்தை அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமைகளை பறிக்க முயலும் கர்நாடகத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை கடந்த ஜூன்29-ஆம் நாள் தில்லியில் சந்தித்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழ்நாட்டுடனான தெண்பெண்ணை ஆற்றுநீர் சிக்கலை இருதரப்பு பேச்சுகளின் மூலம் தீர்த்துக் கொள்ள கர்நாடகம் விரும்புவதாவும், அதனால் தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியிருக்கிறார். இது தமிழகத்தின் உரிமையை சட்டவிரோதமாக வன்கைப்பற்றல் செய்து விட்டு பேசித் தீர்ப்போம் என்பதற்கு ஒப்பானது. குற்றமிழைத்தவர்கள் விசாரணையைத் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பேச்சுகளை அல்ல. தென்பெண்ணை நீரை அணை கட்டி பறித்துக் கொள்ள துடிக்கும் கர்நாடகத்துக்கு, உரிமையை இழந்த தமிழகத்துடன் இணையாக அமர்ந்து பேசும் உரிமை கிடையாது. இதை தீர்ப்பாயம் தான் தீர்க்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்தின் பங்கரபேட்டை ஒன்றியம் யார்கோல் கிராமத்தில் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை பொய்யான காரணங்களைக் காட்டி கர்நாடக அரசு பெற்று விட்டது. அதனடிப்படையில் அணை கட்ட, தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 14.11.2019-ஆம் நாளில் தள்ளுபடி செய்ததுடன், இச்சிக்கலுக்கு தீர்வு காண தீர்ப்பாயம் அமைக்கும்படி மத்திய அரசை அணுகும்படி ஆணையிட்டது.
» சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது: அன்புமணி ராமதாஸ்
» காங்கிரஸ் நெருக்கத்தைப் பயன்படுத்தி காவிரி நீரைப் பெற்றுத்தருக: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
அதனடிப்படையில், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படாத நிலையில், உச்ச நீதிமன்றத்தை தமிழகம் மீண்டும் அணுகியது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மார்ச் 14-ஆம் நாளுக்குள் தீர்ப்பாயத்தை அமைக்கும்படி கடந்த திசம்பர் 14-ஆம் நாள் ஆணையிட்டது. ஆனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து வரும் ஜூலை 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. அதன்படி அடுத்த 3 நாட்களுக்குள் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டியுள்ள நிலையில் தான், அதற்கு முட்டுக்கட்டை போட கர்நாடக அரசு துடிக்கிறது.
தீர்ப்பாயம் அமைப்பதற்கு மாற்றாக, தென்பெண்ணை ஆற்று சிக்கல் தொடர்பாக அடுத்த 3 மாதங்களில் பேச்சு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கர்நாடகம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இவை அனைத்துமே காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை பறிக்க கடந்த காலங்களில் நடத்தப்பட்ட நாடகங்களின் மறு அரங்கேற்றம் தான். இந்நாடகங்களில் தமிழகமும், மத்திய அரசும் மயங்கி விடக் கூடாது.
காவிரி சிக்கல் தொடர்பாக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சு நடத்தப்பட்டும் சிக்கல் தீரவில்லை. மாறாக நடுவர் மன்றத்தின் மூலமாகவும், உச்சநீதிமன்றத்தின் மூலமாகவும் தான் இப்போது நடைமுறையில் உள்ள அரைகுறை தீர்வாவது எட்டப்பட்டது. இதற்கு நடுவே, 1970-களில் ஒருபுறம் தமிழகத்துடன் பேச்சு நடத்திக் கொண்டே, கபினி, ஹாரங்கி, ஹேமாமதி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகளை காவிரி ஆற்றின் துணை ஆறுகளின் குறுக்கே கர்நாடகம் கட்டி முடித்தது. இப்போதும் தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே ரூ.240 கோடியில் அணை கட்ட அனுமதிகளை பெற்று விட்ட கர்நாடகம், பேச்சுகளுக்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டால், ஒருபுறம் பேச்சு நடத்திக் கொண்டே மறுபுறம் அணையை கட்டி முடித்து விடும். அதன்பிறகு பேச்சு நடத்தினாலும், தீர்ப்பாயம் அமைத்தாலும் தென்பெண்ணை ஆற்றில் தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்க முடியாமல் போய்விடும்.
தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கல் தொடர்பாகவும் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பல முறை பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், அவற்றால் எந்த பயனும் ஏற்படவில்லை; இனியும் ஏற்படப்போவதில்லை. எனவே, தென்பெண்ணை ஆற்று சிக்கல் தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு நடத்த தமிழ்நாடு ஒப்புக்கொள்ளக் கூடாது. மத்திய அரசும் இந்த சிக்கலில் தமிழ்நாடு அரசை கட்டாயப் படுத்தக்கூடாது. மாறாக, கர்நாடக அரசின் அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டவாறு, தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை அடுத்த 3 நாட்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago