"தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகளில் ஒன்றிரெண்டு கட்சிகளைத் தவிர, புதிது புதிதாக முளைக்கின்ற கட்சிகள் எல்லாம் சுவரொட்டிக் கட்சிகளாகத் தான் இருக்கின்றன" என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் தங்கவேலு இல்லத் திருமண விழாவில் அவர் பேசியது:
"மணமகனின் பெயர் திலீபன். திலீபன் என்று கூறும்போது எத்தனையோ நினைவுகளை, வரலாற்றுக் குறிப்புகளை, குறிப்பாக ஈழத்திலே நடைபெற்ற பெரும் போராட்ட நினைவுகளை நமக்கு எழுப்புகின்ற ஒரு பெயராகும். அப்படிப்பட்ட பெயரை, திலீபன் என்ற பெயரை தன் பெயராகக் கொண்டிருப்பவர் தான் மணமகன். மணமகள் பெயரோ கலைவாணி. திலீபன் என்ற பெயர், அரசியலில், விடுதலை இயக்கத்தில் காலத்திற்கும் உச்சரிக்கப்படுகின்ற ஒரு பெயர். அதைப் போலவே கலைவாணி என்ற அந்தப் பெயருக்குரிய மணமகள், கலைவாணரை நமக்கு நினைவூட்டும் பெயராகும்.
சென்னையிலே, அதிலும் அண்ணா அறிவாலயத்திலே இது போன்ற சமுதாய சீர்திருத்தத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில், என்னுடைய இல்லத்தில் வாரம் ஒரு திருமணமாவது, சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது என்பதை நான் பெருமையோடு, கர்வத்தோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஏன் இதைப் பெருமையோடு சொல்கிறேன் என்றால், இது போன்ற அறிவார்ந்த சீர்திருத்த சுயமரியாதைத் திருமணங்களை நடத்திக் கொள்வதற்கு ஒரு காலத்தில் முன்வராத இந்தச் சமுதாயம், பார்ப்பனர்களுக்கு, பார்ப்பனியத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தச் சமுதாயம், விழிப்புற்று, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, துரத்தப்பட்ட நிலையிலே இருந்த மக்களைக் கொண்ட சமுதாயம் இன்றைக்கு இவ்வளவு பெரிய எழுச்சிக்கு, இந்த எழுச்சியை நான் சமுதாயச் சீர்திருத்தம் என்ற தலைப்பிலே பார்க்கிறேன்.
அரசியல் விழிப்புணர்ச்சி இன்றைக்கு இந்த இனத்திற்கு ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. இன்னும் தமிழன் அரசியலிலே விழிப்புறவில்லை. விழிப்புற்றால், சுவரொட்டித் தலைவர்களை அவன் இன்றைக்கு ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான். தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகளில் ஒன்றிரெண்டு கட்சிகளைத் தவிர புதிது புதிதாக முளைக்கின்ற கட்சிகள் எல்லாம் சுவரொட்டிக் கட்சிகளாகத் தான் இருக்கின்றன.
சுவரொட்டியிலே பீமன், சூரன், சூரபத்மன் என்றெல்லாம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தலைவர்கள், அரசியலிலே இன்றைக்கு தமிழ் நாட்டிலே முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தந்தை பெரியார் இந்த இயக்கத்தைத் தொடங்கிய அந்தக் காலத்திலும் சரி, அவருடைய நண்பர்களாக இருந்த ராஜாஜி போன்றவர்கள் இந்தச் சமுதாயச் சீர்திருத்தத்தைப் பின்பற்றிய அந்தக் காலத்திலும் சரி, அவர்களையெல்லாம் பின் தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்களுடைய ஏற்றத்திற்கு, செழிப்புக்கு வித்திட்ட
இஸ்லாமிய தலைவர்களானாலும் சரி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களானாலும் சரி, அவர்கள் எல்லாம் பட்ட பாடு வீண் போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் - நாம் தேர்தலிலே வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும், தேர்தலிலே எத்தனை இடங்களைப் பெற்றோம் என்பதை விட, எத்தனை திருமணங்களை இந்த ஆண்டு சுயமரியாதைத் திருமணங்களாக நடத்தி வைத்தோம் என்ற அந்த எண்ணிக்கையிலே தான் நாம் பெருமையடைகிறோம்.
அந்தப் பெருமையை தொடர்ந்து நாம் காப்பாற்ற, தொடர்ந்து நடைமுறைப்படுத்த, நம்முடைய இயக்கத்திலே இன்றைக்கு ஒரு தங்கவேலன் அல்ல, பல தங்கவேலன்கள் உருவாகியிருக்கிறார்கள். இன்றைய தினம் நாம் அரசியலிலே அடைய வேண்டிய அளவுக்கு வெற்றி அடைய விட்டாலும்கூட, சமுதாய சீர்திருத்தத்திலே நாம் பெற்ற வெற்றியை எண்ணிப் பார்த்து பெருமை அடையலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலே இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க. இடைத் தேர்தலில் டெபாசிட் தொகையை இழந்த கட்சியாக விளங்கியதை மறந்து விட முடியாது. அதற்காக அவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்கின்ற முயற்சியிலே ஈடுபடவில்லை. தொடர்ந்து கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாமும் அவர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். எனவே வெற்றி தோல்வி என்பது ஒரு இயக்கத்தின் வளர்ச்சியை நிர்ணயித்து விடாது. நாம் நம்முடைய இயக்கத்தை, பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து, அண்ணா வழிமுறைகளைப் பின்பற்றி வளர்த்தவர்கள், இன்றைக்கும் வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்.
இன்றைக்கு பெரியார் இல்லை, அண்ணா இல்லை என்றாலும் அவர்கள் வார்த்து தந்த கொள்கைகளும், இலட்சியங்களும் இருக்கின்றன. நமக்கு அவைகள் தான் துணை. பெரியாருடைய துணையும், அண்ணா துணையும், அவர்கள் வளர்த்து ஆளாக்கிய திராவிட இயக்கத்தின் துணையும் இருக்கிற வரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை, திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்தி விட முடியாது என்பதை நான் உறுதிபடச் சொல்கிறேன்" என்றார் கருணாநிதி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago