கும்பகோணம் அருகே குடிநீர் தட்டுப்பாடு என புகார் - திண்ணையில் அமர்ந்து உடனடி தீர்வு கண்ட எம்எல்ஏ

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள உத்திரையில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினர், அங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து அதிகாரிகளை அழைத்து பிரச்சினைக்குத் தீர்வு கண்ட சம்பவம் மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கும்பகோணம் வட்டம், உத்திரையில் ரூ. 5.10 லட்சம் மதிப்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் அனைவருக்கும் சீராக செல்ல வேண்டும் என்பதால் பால் வால்வு பொருத்தி வழங்கி வந்தனர்.

இந்நிலையில், சில வீடுகளில் பால் வால்வு அகற்றப்பட்டு, மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டுள்ளது. இதனால் மற்ற வீடுகளுக்குக் குடிநீர் வராமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் புகாரளித்தனர்.

அதன் பேரில் அங்குச் சென்ற அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி, பொறியாளர் அய்யப்பன், வட்டார ஒருங்கிணைப்பாளர் துரை.கார்த்திகேயன் மற்றும் அலுவலர்களை வரவழைத்து, போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி அருகிலிருந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். இதனையறிந்த கிராம மக்கள் அங்கு கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது. அலுவலர்கள் பணியினை தொடங்கிய அரை மணி நேரத்திற்குப் பிறகு அன்பழகன் அங்கிருந்து சென்றார். பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்ட சட்டப்பேரவை உறுப்பினரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

குடிநீர் பிரச்சினைக்கான காரணம் குறித்து தெரிவித்த அலுவலர்கள், “குடிநீர் குழாயிலுள்ள பால் வால்வை அகற்றி, மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டதால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனப் புகார் வந்ததையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்டோம். ஒரு வீட்டில் பொருத்தியிருந்த மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்குள் தகவலறிந்து மற்ற வீடுகளிலுள்ளவர்கள், மோட்டாரை அகற்றி விட்டனர். இதையடுத்து, இதுபோன்று குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம்" என கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE