மேகேதாட்டு விவகாரம் | அனைத்து கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல்மடை பாசன மாநிலத்திற்கும், கடைமடை பாசன மாநிலத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை அறியாமல், இரு மாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த கர்நாடக அமைச்சர் சதி செய்வது கண்டிக்கத்தக்கது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கடந்த ஜூன் 20ம் நாள் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தமிழகத்தில் இரண்டாம் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிவக்குமார், அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழக அரசு, மேகதாது அணை திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இது இரு மாநில மக்களுக்கு இடையே பகைமையையும், வெறுப்பையும் மூட்டும் நச்சுத் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.

தமிழகத்தில் இரண்டாம் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுகிறது என்பதே அப்பட்டமான பொய். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்கப்படும் தண்ணீரைக் கொண்டு தான் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இன்னும் கேட்டால் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கான தண்ணீர் மேட்டூர் அணையில் அளவிடப்பட்டது. ஆனால், இப்போது பிலிகுண்டுலுவில் அளவிடப்பட்டு, அதன் பிறகு தான் ஒகேனக்கல்லுக்கு வருகிறது. அதன்படி ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரில் புதுவைக்கான 7 டி.எம்.சி தவிர மீதமுள்ள நீர் முழுவதும் தமிழகத்துக்கு சொந்தமானது.

அதைக் கொண்டு இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் போது அதில் தலையிட கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடந்த 21.09.1998ம் நாள் மத்திய நீர்வள அமைச்சகத்தின் துணை ஆணையர் பி.கே.சக்கரவர்த்தி எழுதிய கடிதத்தில் இவை அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் தமிழகம் ஏதேனும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தினால், அதற்கும் இந்த விளக்கம் பொருந்தும். ஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு, தமிழக குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமானவை என்று சிவக்குமார் குற்றஞ்சாட்டுவது உள்நோக்கமானது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதேநேரத்தில் மேகேதாட்டு அணைக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை டி.கே.சிவக்குமார் வலியுறுத்துவது தான் சட்டவிரோதமானது. காவிரி ஆறு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறு என்பதால், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் அனுமதி இருந்தால் மட்டும் தான் கர்நாடக அரசால் அணை கட்ட முடியும். இதை மத்திய அரசு பலமுறை உறுதி செய்துள்ளது. அதனால், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசு நினைத்துக் கூட பார்க்க முடியாது. இது கர்நாடக மாநில அரசுக்கும் நன்றாக தெரிந்திருக்கும்.

ஆனால், 25.04.2000ம் நாள் கர்நாடகத்திற்கு எதிராக ஆந்திர அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை சுட்டிக் காட்டி, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று சிவக்குமார் கூறியிருக்கிறார். கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்புக்கும் மேகதாது அணை விவகாரத்திற்கும் இடையே எந்த ஒப்பீடும் செய்ய முடியாது. மத்திய அரசை தவறாக வழிநடத்த கர்நாடக அமைச்சர் முயலுவது அறம் அல்ல.

ஆனாலும், கடந்த காலங்களில் குறுக்குவழிகளை பயன்படுத்தி, சில அனுமதிகளை பெற்ற கர்நாடக அரசு, அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதை ஆய்வு செய்து உடனடியாக ஒப்புதல் அளிக்க நீர்வள ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும் என்று மத்திய நீர்வள அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது உச்சநீதிமன்ற அவமதிப்பு ஆகும். நீர்வள ஆணையத்தின் அங்கமான காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்து தடை பெற்றுள்ளது. அதை மீறி மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்க முடியாது.

மேகதாது அணை விவகாரத்தில் விதிகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழகத்துக்கு தான் சாதகமாக உள்ளன. ஆனால், அதை மதிக்காக கர்நாடக அரசு இரு மாநில மக்களுக்கு இடையே பகைமை நெருப்பை மூட்டி குளிர்காயத் துடிக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். மேகேதாட்டு அணையை தடுப்பது மட்டுமின்றி, தமிழகத்துகான குடிநீர் திட்டங்களை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்