தருமபுரி அருகே விவசாய கிணற்றில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் - லாரியை சிறைப்பிடித்த கிராம மக்கள்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி அருகே விளைநிலத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய வாகனத்தை கிராம மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நல்லம்பள்ளி அடுத்த சிவாடி அருகே தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள பயன்பாடற்ற கிணறு ஒன்றில் நேற்று (30-ம் தேதி) நள்ளிரவில் டிப்பர் லாரி ஒன்றில் இருந்து சிலர் மர்ம பொருட்களை கொட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த லாரியில் இருந்த பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்போது அவ்வழியே சென்ற கிராம மக்கள் விசாரித்துள்ளனர்.

அதில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயோ கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை வெளியேற்றும் பணியை ஒப்பந்தம் பெற்றவர் கழிவுகளை அந்த கிணற்றில் தொடர்ந்து கொட்டி வந்தது தெரிய வந்தது. எனவே, சிவாடி, கெங்கலாபுரம், பாகலஅள்ளி, கந்து கால்பட்டி, ராமாயண சின்னஅள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டு வாகனங்களை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தொப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் மருத்துவக் கழிவுகளை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்வதாகவும், கிணற்றில் கொட்டிய கழிவுகளை அகற்றி விடுவதாகவும், கொட்டிய தரப்பினர் தெரிவித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

இருப்பினும் அப்பகுதி மக்கள் கூறும்போது, 'சுமார் 20 முறை லாரி மூலம் மருத்துவக் கழிவுகளை கிணற்றில் கொட்டியிருப்பதாக விசாரணையில் தெரிய வருகிறது. இப்பகுதியைச் சுற்றி விளை நிலங்கள் அதிகம் உள்ளன. தொடர்ந்து விவசாயிகள் பலரும் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளன. மருத்துவக் கழிவுகள் இவ்வாறு கொட்டப்பட்டால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படையும். எனவே, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து கிணற்றில் ஏற்கனவே கொட்டப்பட்ட மொத்த மருத்துவ கழிவுகளையும் அகற்ற வேண்டும்.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் வேறு எங்கும் இவ்வாறு மருத்துவக் கழிவுகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கழிவுகளை அகற்ற அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் மட்டுமே அவற்றை கையாள ஒப்பந்ததாரருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்' என்று தெரிவித்தனர். இன்று (1.7.23) உலக மருத்துவர்கள் தினம். இந்நிலையில் நேற்று இரவு கிராமப் பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE