சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு தொந்தரவு அளித்தால் போராட்டம் நடத்துவேன்: அண்ணாமலை எச்சரிக்கை

By க.சக்திவேல்

கோவை: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு மீண்டும் மாநில அரசு தொந்தரவு அளித்தால், நானே அங்கு சென்று போராட்டம் நடத்துவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 30) அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக நேற்றுமுன்தினம் அறிவித்தார். பின்னர், அதை நிறுத்திவைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் அதிகாரம் குறித்து எதிர்கட்சி தலைவராக இருந்தபோது 2,3 முறை பேசியுள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், இப்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏன் இருக்கிறது?. செந்தில்பாலாஜி மீது பாஜகவுக்கு தனிபட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. அவர் செய்த குற்றங்கள் மீதுதான் வெறுப்பு. முதல்வரின் நடவடிக்கைகள் தனிமனிதனை காப்பாற்றும் வகையில் இருக்கின்றது. தமிழகத்தில் 99 சதவீதம் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கின்றது, பாதி பேர் ஏதோ ஒரு வழக்கில் சிக்கி இருக்கின்றனர். செந்தில் பாலாஜி மீதும் ஊழல் வழக்கு இருக்கிறது. அவர் அமைச்சர் பதவியை கேடயமாக பயன்படுத்துகின்றார் என்பதால் ஆளுநரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். இவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என நம்புகிறோம். அனைவருக்குமான அதிகாரிகளாக அவர்கள் இருக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபைக்கு என்று ஒரு மகத்துவம் உள்ளது. அரசு உத்தரவுக்கு பிறகு அதன் மீது ஏறியவர்கள் யார் என்று பார்த்தால், கடவுளை நம்பாதவர்கள். அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்கள், தீட்சிதர்கள் மீது கோபம் இருப்பவர்கள். அதை பாஜக ஏற்றுக்கொள்ளாது. சிதம்பரம் கோயிலுக்கு மட்டும்தான் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு உள்ளது. எனவே, மாநில அரசு சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது. மீண்டும் தொந்தரவு அளித்தால் நானே சிதம்பரம் சென்று போராட்டம் நடத்துவேன்" இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE