கருத்துரிமை, பேச்சுரிமையை மறுக்கக்கூடாது - பாஜக பொதுக்கூட்ட அனுமதி வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: ‘கருத்துரிமை, பேச்சுரிமையை மறுக்கக்கூடாது. நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கலாம்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி எஸ்.கார்த்திக்கேயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1-ல் பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கரூர் மாநகராட்சி ஆணையரிடம் 8.6.2023-ல் மனு அளித்தோம். எங்கள் மனுவை நிராகரித்து மாநகராட்சி ஆணையர் 9.6.2023-ல் உத்தரவிட்டார். அதை ரத்து செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.கோவிந்தராஜன் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், எதிர்க்கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. எதிர்க்கட்சி சில ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சியாக மாறும்போது, முன்பு ஆளும் கட்சியாக இருந்தவர்களின் கருத்துக்கள் பொதுமக்களிடம் சென்றடைவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கிறது. இந்த அணுகுமுறை எப்போதும் உள்ளது.

நியாயமான கட்டுப்பாடுகள் விதிப்பது தவறில்லை. அதே நேரத்தில் தனிப்பட்ட நபர்கள் நினைப்பதை பேச அனுமதிக்க வேண்டும். அது பொதுக்கூட்டமாகவோ, வேறு முறைகளிலாவது இருக்கலாம். கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது. கருத்துரிமை, பேச்சுரிமையை தடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. இதை அனுமதிக்க முடியாது. அதுபோன்ற முயற்சிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.

இந்த வழக்கில் திருவள்ளுவர் அரங்கில் பொதுக்கூட்டம் அல்லது வேறு எந்த கூட்டங்களுக்கும் அனுமதி வழங்குவதில்லை, விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் ஒரு மாதத்துக்கு விளையாட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை.

மனுதாரரின் மனு உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது." இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE