“என் அமைச்சர்களை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை” - ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: "எனது ஆலோசனையின்றி எனது அமைச்சரை பதவி நீக்கம் செய்த உங்கள் உத்தரவு, அரசமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது, தவறானது" என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று ஒரு பக்க அறிக்கை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி நீக்கப்படுவதற்கான காரணம் குறித்து முதல்வர் முக. ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதம் எழுதி இருந்தார். இதற்கு முதல்வர் தரப்பில் பதில் கடிதம் அனுப்பப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்விவரம்: "நேற்றிரவு 7 மணியளவில் 'செந்தில் பாலாஜியை எனது அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்ததாக' உங்கள் கடிதம் ஒன்றை பெற்றேன். அதே நேற்றிரவு 11.35 மணியளவில் அதை நிறுத்தி வைப்பதாகவும் கடிதம் ஒன்றை பெற்றேன். உங்களின் இந்த இரண்டு கடிதங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டாலும், இந்த விவகாரத்தில் உள்ள உண்மைகள் மற்றும் சிக்கல் இரண்டையும் தெளிவுபடுத்துவதற்காக உங்களுக்கு இதை எழுதுகிறேன்.

முதலாவதாக, முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனை நீங்கள் அனுப்பிய இரண்டு கடிதங்களுக்கும் கோரப்படவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இரண்டாவதாக, அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவு மற்றும் மறைமுகமான அச்சுறுத்தல் போன்ற கடுமையான வார்த்தைகளைக் கொண்ட முதல் கடிதத்தை நீங்கள் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்க அதைத் திரும்பப் பெற்றீர்கள்.

இதன்மூலம் இதுபோன்ற முக்கியமான முடிவு எடுக்கும்முன் நீங்கள் சட்டப்பூர்வ ஆலோசனை எதையும் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது. சொல்லப்போனால், இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற வேண்டும் என்பதை சொல்லவே உங்களுக்கு உள்துறை அமைச்சரின் உதவி தேவைப்பட்டது என்பதும், இந்த விஷயத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் நீங்கள் அவசரப்பட்டுச் செயல்பட்டுள்ளீர்கள் என்பதும் இதன்மூலம் தெரியவந்துள்ளது.

நானும், எனது அமைச்சரவை மற்றும் எம்எல்ஏக்களும் இறையாண்மை கொண்ட மக்களின் நம்பிக்கையை அனுபவித்து வருகிறோம். எங்களுக்குப் பின்னால் உறுதியாக நிற்கும் மாநில மக்களின் நம்பிக்கைதான் எங்களின் வலுவான சொத்து. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை எதிர்கொள்ளும்போது ஆளுநர் போன்ற உயர் அரசியலமைப்பு அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். அதைவிடுத்து அரசியலமைப்பு அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவு போன்ற ஆதாரமற்ற அச்சுறுத்தல்களை கொடுத்து அரசமைப்பு சட்டத்தை மீற வேண்டாம்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலைமை குறித்த உங்கள் குறிப்பிட்ட சில அவதானிப்புகளுக்குப் பதிலளிக்கிறேன். ஜூன் 1 ஆம் தேதி நான் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்திருந்தால், விசாரணையை எதிர்கொள்ளும் ஒரு நபருக்கும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒரு நபருக்கும் மற்றும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கும் இடையேயான வித்தியாசத்தை நான் தெளிவாகக் கூறியிருப்பதை அறிந்திருப்பீர்கள்.

மத்திய அரசுக்கு எதிராக லில்லி தாமஸ் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மட்டுமே அமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அந்த தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி தகுதியிழப்பு என்பது தண்டனைக்குப் பிறகுதான் என்பது தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி, அமலாக்க இயக்குனரகத்தால் விசாரணைக்காக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இது உங்கள் கடிதத்தில்கூட குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு மட்டுமே அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உள்ளது என்பதை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெளிவாக கூறியுள்ளது.

கடந்த அ.தி.மு.க அரசாங்கத்தின் போது செய்த குற்றங்களுக்காக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற என் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு நீங்கள் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறீர்கள். ஏன், பல மாதங்களாக உங்கள் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள குட்கா வழக்கில் வழக்குப் பதிவு செய்ய சிபிஐ அனுமதி கோரியும் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

உண்மையில், இதுபோன்ற செயல்கள் உங்களின் இரட்டை நிலைப்பாட்டையும் அதன்பின்னணியில் உண்மையான நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. அநாகரீகமான மொழிப்பிரயோகம் குறித்த உங்களது குற்றச்சாட்டுக்கு சில விஷயங்களை தெரியப்படுத்த விரும்புகிறேன். தமிழக அரசு உங்களுக்கும் உங்கள் அலுவலகத்துக்கும் எப்போதும் மரியாதை அளித்து வருகிறது. தமிழ் கலாச்சாரத்தின்படி எப்போதும் உங்களுக்கு மரியாதை வழங்கி வருகிறோம். மரியாதை கொடுப்பதால், அரசியலமைப்புக்கு விரோதமான உங்கள் உத்தரவுக்கு நாங்கள் அடிபணிவோம் என்று அர்த்தமில்லை.

அரசியலமைப்பு வழங்கிய உரிமையின்படி, அமைச்சர்களாக யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, என் அமைச்சர்களை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்; அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மட்டுமே உள்ள தனி உரிமை.

எனது ஆலோசனையின்றி எனது அமைச்சரை பதவி நீக்கம் செய்த உங்கள் உத்தரவு, அரசமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது, தவறானது மற்றும் சட்டத்தால் அனுமதிக்கப்படாதது, எனவே அது புறக்கணிக்கப்பட்டது" இவ்வாறு முதல்வர் அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE