“ஒரு கைதி எப்படி அமைச்சராக தொடர முடியும்?” - செந்தில் பாலாஜி விவகாரத்தில் டி.ஜெயக்குமார் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: “ஒரு கைதி எப்படி அமைச்சராக தொடர முடியும்?” என்று செந்தில் பாலாஜி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் ஸ்டாலின். அவர் என்ன கூறினார் என்பது தற்போதும் சமூக ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கிறது. 'செந்தில் பாலாஜி ஊழலில் திளைத்து வருகிறார். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்' என்று சொன்னவர் ஸ்டாலின்.

செந்தில் பாலாஜி விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, அவர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே கூறி உள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே குழுவை அமைத்து அதன் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரசியல் எதுவும் கிடையாது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்து, அவருக்கு கைதி எண் அளிக்கப்பட்ட பிறகு, ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் தொடர முடியும். அதுதான் எங்களுடைய கேள்வி.

அதன் அடிப்படையில்தான், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் ஆளுநரிடம் மனு அளித்தோம். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னுதாரணம் எங்கள் ஆட்சியிலேயே இருந்ததை தெரிவித்தோம். கருணாநிதி ஆட்சியில் என்.கே.பி.ராஜா நீக்கப்பட்டுள்ளார். அதுபோல செந்தில் பாலாஜியை நீக்கவேண்டும் என்று தெரிவித்தோம். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.

ஒரு அமைச்சருக்கு எதற்கு இலாகா ஒதுக்கப்படுகிறது. இலாகாவை கவனிப்பதற்குத்தான். இலாகாவை கவனிக்கதான் கார், பங்களா, ஊழியர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலாகாவே இல்லாத அமைச்சருக்கு எதற்கு மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும். இதுதான் அதிமுகவின் கேள்வி.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாத சூழ்நிலையில் அமைச்சராக இருப்பவர் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பார். அதற்கு வாய்ப்பு இல்லை. அமைச்சர் என்ற பாதுகாப்பு கேடயம் இருக்கும்போது ஈடி என்ற வாள் தாக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள். அமைச்சர் பதவியில் இருக்கும் வரை விசாரணைக்கு குந்தகம் ஏற்படும். பல உண்மைகள் வெளிவராமல் போய்விடும். செந்தில் பாலாஜியை காப்பாற்றும் முயற்சியில் திமுக ஈடுப்பட்டுள்ளது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.

தார்மிக அடிப்படை என்று ஒன்று உள்ளது. இவ்வளவு தூரம் மல்லுக்கட்டிக்கொண்டு ஏன் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டும். இதுதான் மக்களுடைய கேள்வி. அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளது. தற்போது அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். சிறைவாசியாக இருக்கிறார். அமைச்சராக நீடிப்பதற்கான தார்மிக உரிமையை அவர் இழந்துவிட்டார். அதனால், அவரை நான் நீக்குகிறேன் என்று ஆளுநர் நீக்கி இருக்கிறார்.

செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின்தானே வலியுறுத்தினார். ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அவர்தானே கூறினார். இப்போது நடவடிக்கை எடுக்கிறார்கள். பாராட்டிவிட்டு போங்கள். அவ்வாறு இல்லாமல், அன்றைக்கு ஒரு பேச்சு, இன்றைக்கு ஒரு பேச்சு என்றால் நாட்டு மக்கள் கேட்டுகொண்டே இருக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இது 365 பிரிவை நோக்கிதான் சென்றுகொண்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. ஊடகங்கள் மிரப்பட்டப்படுகின்றன. தனி மனிதர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், ஆள் கடத்தல், பஞ்சாயத்து இவை அனைத்தும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.

தருமபுரியில் ஒரே நாளில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை. காவல் துறை மிரட்டப்படும் சூழ்நிலை உள்ளது. காவல் துறையினர் அரிவாளால் வெட்டப்படுவதும் நடக்கிறது. பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்களுக்கே இந்த நிலை உள்ளது.

அதிமுக ஆட்சியின்போது சட்டப்பேரவையில் இருந்து பனியனை கிழித்துகொண்டு ஆளுநரைச் சென்று சந்தித்தார் ஸ்டாலின். ஆட்சியை உடனே கலைக்கவேண்டும் என்று சொன்னார். அப்போதெல்லாம் அவருக்கு ஆளுநர் தேவை. மாநில அரசை களைக்க சட்டப்பிரிவு 365-ஐ பயன்படுத்தவேண்டும் என்று சொல்வதற்கு வாய் இருந்தது. இப்போது 365 என்றால் கசக்கிறதா?" என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE