‘இடம் இல்ல... இடம் இல்ல...’ - வாகன ஓட்டிகளை விரட்டும் ஆலந்தூர் மெட்ரோ

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன நிறுத்தப் பகுதியில் இடநெருக்கடி பிரச்சினை தொடர் கதையாகி வருகிறது. இதனால், பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, விமான நிலையம் – விம்கோ நகர், பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் என 2 வழித் தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப் படுகின்றன. இந்த வழித் தடங்களில் மொத்தம் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.

இதில், 27 மெட்ரோ ரயில் நிலையங்களில் கார்களை நிறுத்தி செல்லும் வசதியும் உள்ளது. வழக்கமாக மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது மிகவும் வசதியாக உள்ளது. வீடுகளில் இருந்து தங்கள் சொந்த வாகனத்தில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், அங்குள்ள வாகன நிறுத்தப் பகுதியில் அதை நிறுத்திவிட்டு, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

வாகன நெரிசலில் சிக்காமல் எளிதாக, சொகுசாக செல்ல முடிவதால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன நிறுத்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இடநெருக்கடி பிரச்சினை தொடர் கதையாகி வருகிறது.

விம்கோநகர்–விமானநிலையம், சென்ட்ரல்–பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களின் சந்திப்பு நிலையமாக இருப்பதால், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பின்புறம் பெரிய அளவில் கார் நிறுத்தப் பகுதி உள்ளது. இது கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் வலது பகுதியை ஒட்டிஇருசக்கர வாகன நிறுத்தம் அமைந்துள்ளது, இங்கு சுமார் 700 வாகனங்களை நிறுத்த முடியும். ஆனாலும், குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாததால், பயணிகள் மிகவும் தவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, சுமார் 500 வாகனங்கள் வரை நிறுத்தப்பட்டதுமே, ‘இங்கு வாகனங்களை நிறுத்த இடம் இல்லை’ என்று போர்டு வைத்து, வரும் வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர். இதனால், மெட்ரோ ரயில் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இது குறித்து சில பயணிகள் கூறியதாவது: ஆலந்தூர் ராம்குமார்: நான் தினமும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தப் பகுதியில் எனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் அண்ணா சாலை பகுதிக்கு சென்று திரும்புகிறேன். கடந்த சில நாட்களாக, ஆலந்தூர் வாகன நிறுத்துமிடத்தில் வழக்கமான பயணிகளுக்குகூட வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

200 வாகனங்கள் நிற்பதற்கு இடம் இருக்கும் சூழலில்கூட, ‘வாகனத்தை நிறுத்த இடமில்லை’ என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். வாகன நிறுத்தப் பகுதியில் ஆங்காங்கே ‘நோ பார்க்கிங்’ போர்டு வைத்தும் இடத்தை அடைக்கின்றனர். எனவே, இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியை ஒழுங்கு படுத்தி கூடுதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும்.

வாகன நிறுத்தத்தை விரிவுபடுத்தி, இடநெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தற்காலிக அடிப்படையில் கார் நிறுத்தும் பகுதியை மூடி 3 மாதங்கள் ஆகிவிட்டன. அதையும் திறந்து இருசக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பயணி கோமதி: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தின் வாகன நிறுத்தப் பகுதியில் அங்கும் இங்கும் சீரற்ற முறையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதை ஊழியர்கள் கண்டுகொள்வது இல்லை. வாகன நிறுத்தப் பகுதியில் வாகனத்தை நிறுத்துவதும், மீண்டும் எடுப்பதும் சிரமமாக உள்ளது.

மேலும், வாகன நிறுத்தப் பகுதியில்போதிய மின் விளக்கு வசதியும் இல்லை.இதனால், இரவு நேரத்தில் பணிமுடித்து திரும்பும் பெண் பயணிகள் தங்கள் வாகனத்தை எடுக்க அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே, போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். பயணிகள் நிறுத்தும் வாகனங்களை முறையாக நிறுத்தி, முறையாக கண்காணிக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE