பழுதாகி ஒரு மாதம் ஆகிறது... சென்னை - சின்னமலைக்கு ‘சிக்னல்’ கிடைக்குமா?

By செய்திப்பிரிவு

சென்னை: சின்னமலை தாலுகா அலுவலக சாலையில் பழுதான சிக்னலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை அண்ணா சாலையில், கிண்டி,வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவிளங்குவது சின்ன மலை. இப்பகுதியை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்கடந்து செல்கின்றன. குறிப்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம், மாநகர போக்கு வரத்து கழக பணிமனை, பள்ளி ஆகியவை இருப்பதால், ஆளுநர் மாளிகைக்கு எதிரே உள்ள தாலுகா அலுவலக சாலையில் மக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் எந்நேரமும் இருக்கும்.

இந்த பிரதான சாலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போக்குவரத்து சிக்னல் பழுதடைந்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்குஅசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலையைக் கடப்பது பாதசாரிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, கிண்டி பகுதியில் இருந்து வருவோர் ஏற்கெனவே சின்னமலை மெட்ரோ அருகே ஒரு சிக்னலில் நின்றுவிட்டு வருகின்றனர்.

இந்த இடத்தில் சிக்னல் இல்லாததால், அவர்கள் வேகத்தை கட்டுப்படுத்துவது இல்லை. அதேபோல, அண்ணா சாலையில் இருந்தும் வாகனங்கள் அதிகவேகத்தில் வருகின்றன. இவற்றை எதிர்கொண்டு, தாலுகா அலுவலக சாலையை கடப்பது மிகவும் சவாலாக இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகின்றனர் பாதசாரிகள்.

சைதாப்பேட்டையை சேர்ந்த ரா.கல்யாணராமன்: ஒரு மாதத்துக்கும் மேலாக சிக்னல் பயன்பாட்டில் இல்லாததால் பொதுமக்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. கடந்த வாரம் இருபுறமும் புதிய சிக்னல் வைத்தார்கள். வைத்த சில நாட்களிலேயே அவை கீழே விழுந்து விட்டன. தனியார் நிறுவன ஊழியர் பஷீர்: நடைமேம்பாலம் இருந்தாலும் முதியவர்களால் அதில் ஏறிச் செல்ல முடியவில்லை.

அதனால், பெரும்பாலும் சாலையில்தான் கடந்து செல்கின்றனர். இந்த சிக்னல் பயன்பாட்டில் இல்லாதது முதியவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது பற்றி சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆர்.சக்திவேல் கூறும்போது, ‘‘சிக்னல் அமைப்பதில் பிரச்சினை இருந்ததால் இருபுறமும் சிக்னல் அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் சிக்னல் அமைப்பதற்கான பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன. முன்பு இருந்ததைவிட சிறப்பாக, எல்இடி விளக்குகளுடன் சிக்னல் அமைக்கப்படும். இது ஓரிரு நாளில்பயன்பாட்டுக்கு வந்துவிடும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE