தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் - ஆளுநர் மாளிகை அறிவிப்பு | முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின்போது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக, இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி,பலரிடம் பணம் பெற்று மோசடிசெய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கை விரைவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில்அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 13-ம் தேதி சோதனை நடத்தினர். சோதனை முடிவில், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அரசு இல்லத்தில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் 14-ம் தேதி அதிகாலை கைதுசெய்தனர்.

அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரதுஇதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதற்கிடையே, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்த சென்னைமுதன்மை அமர்வு நீதிபதி, ஜூன் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கஉத்தரவிட்டார். குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைபெற உயர் நீதிமன்றம் அனுமதிவழங்கியது. இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்றக் காவல் கடந்த 28-ம்தேதியுடன் முடிந்த நிலையில், காவலை ஜூலை 12-ம் தேதி வரைநீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிறைத் துறையினரின் பாதுகாப்புடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி கவனித்த மின்துறையைநிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையை, அமைச்சர் முத்துசாமியிடமும் வழங்கு வதுடன், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவெடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.

ஜூன் 14-ம் தேதி முதல்வரின் பரிந்துரையை திருப்பி அனுப்பியஆளுநர், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பது குறித்து விளக்கம் கோரினார். அன்றே விளக்கங்களுடன் மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி குற்றவியல்நடவடிக்கையை எதிர்கொண்டிருப்பதாலும், தற்போது அவர் நீதிமன்றக் காவலில் இருப்பதாலும், தார்மீக அடிப்படையில் அமைச்சரவையில் நீடிப்பதை ஏற்கமுடியாது என்று ஆளுநர் கடந்த 16-ம் தேதி தெரிவித்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களை 2 அமைச்சர்களிடம் பிரித்து அளித்திருப்பது குறித்து அரசு நிர்வாகஉத்தரவு பிறப்பித்தது. அதில், ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்’ என்றும் அறிவித்தது.

இந்த சூழலில், ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று இரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றது மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குஉள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் செந்தில் பாலாஜி குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். அவர் அமைச்சர் பதவியை முறைகேடாக பயன்படுத்தி, விசாரணையில் தலையிடுவதுடன், சட்ட நடவடிக்கைகளை தடை செய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது அவர் அமலாக்கத் துறையின் குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவர் மீதான பல ஊழல் மற்றும் குற்ற வழக்குகளை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் அமைச்சராக தொடர்வது, நேர்மையான விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாநில செயல்பாடுகளுக்கும் இடையூறை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டு, அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக நீக்கியுள்ளார். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

சட்டரீதியாக சந்திப்போம் - முதல்வர் ஸ்டாலின் உறுதி: சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்’’ என்றார்.

இந்நிலையில், ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE