ஆறு வழிச் சாலைக்காக தோண்டப்பட்ட ஏரி மண் - ஆய்வு செய்ய திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆறு வழிச் சாலைக்காக ஏரி மண் கூடுதல் அளவு எடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் தாலுகா சித்தம்பாக்கம் கிராமத்தை சேரந்த வழக்கறிஞர் ஜெ.மணிகண்டன் தாக்கல் செய்த மனுவில், "சித்தம்பாக்கம் கிராமம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமம். இந்த கிராமத்தில் 198 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 500 ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. எங்கள் கிராமம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராமங்களின் நீர் ஆதாரமாகவும் இந்த ஏரிதான் உள்ளது.

இந்த நிலையில் புணப்பாக்கம் முதல் திருவள்ளூர் வரை 6 வழிச் சாலை அமைக்க தமிழ்நாடு அரசு கடந்த 2022ல் திட்டம் கொண்டுவந்தது. அந்த திட்டத்துக்காக ஏரியின் கரையோர பகுதிகளில் இருந்து மண் எடுக்கப்படுகிறது. மிக அதிக அளவில் மண் எடுப்பதுடன் ஏரியின் எல்லைப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாவட்ட கலெக்டர் கனிம வளத்தை எடுக்க ஒப்பந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி கடந்த மே 15ம் தேதி ஆணை பிறப்பித்துள்ளார். எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கலெக்டரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் யோகேஸ்வரன், எம்.மணிமாறன், ஆகியோர் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், ஏரியிலிருந்து மண் அள்ளுவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்குமாறு அரசுக்கு தரப்பு உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாநில சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் மதிப்பீடு ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாவட்ட கலெக்டர் 0.9 மீட்டர் ஆழத்துக்குத்தான் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அந்த அனுமதி மீறப்பட்டு கூடுதல் ஆழத்துக்கு ஏரியில் மண் எடுக்கப்பட்டுள்ளது" என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஏரியில் கூடுதல் ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசீலிப்பதுடன் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE