பொது சிவில் சட்டம் | “மதப் பிரச்சினையை அதிகமாக்க பிரதமர் மோடி முயற்சி” - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: “மதப் பிரச்சினையை அதிகமாக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கருதிக் கொண்டிருக்கிறார்” என்று பொது சிவில் சட்டத்துக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் வலியுறுத்தல் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், “மணிப்பூர் மாநிலம், இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி ஆளுகிற மாநிலம். அந்த மணிப்பூர் மாநிலம் கடந்த 50 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் அந்தப் பக்கமே போகவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட 50 நாட்களுக்குப் பிறகுதான் அமித் ஷா நடத்தி இருக்கிறார். இதுதான் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் லட்சணம்.

இந்த லட்சணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று சொல்லி இருக்கிறார். எனவே, ஒரு நாட்டினுடைய சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும். மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் நம்முடைய மோடி. எனவே மதப் பிரச்சினையை அதிகமாக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார்.

நான் உறுதியோடு சொல்கிறேன், நிச்சயமாக உறுதியாக வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். தயாராகி விட்டார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மேலும், பாட்னா கூட்டத்துக்கு பிறகு மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், பாஜகவிற்கு சரியான பாடத்தை வழங்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்றும் பேசிய முதல்வர் ஸ்டாலின், குடும்ப அரசியல் குறித்து பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். அதன் விவரம்: குடும்ப அரசியல் செய்கிறோமா? - பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரதமர் மோடி பேசியது என்ன? - பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கடந்த 14-ம் தேதி முதல் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை 8.5 லட்சம் பேரிடம் இருந்து கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தெரிவித்துள்ளார். ஜூலை 14-ம் தேதி வரை அனைத்து தரப்பினரும், பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகள், எதிர்ப்புகளை சட்ட ஆணையத்திடம் தெரிவிக்க அவகாசம் தரப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பாஜக நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, “பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் என பல உறுப்பினர்கள் உள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டத்தையும் பின்பற்ற முடியுமா? அவ்வாறு இரு சட்டங்களை பின்பற்றினால் அந்த குடும்பத்தை நடத்த முடியுமா? இந்த கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுகிறேன்.

இருவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்” என்றார்.

இதனிடையே, பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொது சிவில் சட்டத்தை, கொள்கை அடிப்படையில் ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. | வாசிக்க > பிரதமர் வலியுறுத்தும் பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு - ஆம் ஆத்மி கட்சி ஆதரவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE