சென்னை: கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,919 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கரும்புக்கான உற்பத்திச் செலவைக் கூட ஈடு செய்யாத இந்த கொள்முதல் விலை, விவசாயத்தை இலாபம் தரும் தொழிலாக மாற்றுவதற்கான மத்திய அரசின் இலக்கை எட்டுவதற்கு எந்த வகையிலும் உதவாது என்பதே உண்மை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,150 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கும் கூடுதலான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு 0.1%க்கு ரூ.30.7 வீதம் கூடுதல் விலை வழங்கப்படும். குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு அதே அளவில் குறைவான விலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, 9.50% அல்லது அதற்கும் குறைவானத் திறன் கொண்ட கரும்புக்கு ரூ.2919.75 விலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50% தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு இந்த விலை தான் கிடைக்கும். ஆனால், இது போதுமானதல்ல.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் கரும்புகளுக்கு கடந்த ஆண்டில் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,821 வழங்கப்பட்டது. இப்போது ரூ.98 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 3.47% மட்டுமே உயர்வு ஆகும். இந்த கொள்முதல் விலையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய ரூ.1,570 மட்டுமே செலவு ஆவதாகவும், அதை விட 100.60% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது, பற்றாக்குறையான கொள்முதல் விலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உழவர்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வேதனைத் தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்று அமைந்திருக்கிறது.
» பட்டுக்கோட்டை நகைக்கடை அதிபர் தற்கொலை வழக்கை தனி அமைப்பு மூலம் விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்
» தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராகிறார் சிவ்தாஸ் மீனா - இன்று அறிவிப்பு வெளியாகிறது
கரும்புக்கான உற்பத்திச் செலவு டன்னுக்கு ரூ.1,570 மட்டும் தான் என்று எந்த அடிப்படையில் மத்திய அரசு கணக்கிட்டது என்று தெரியவில்லை. கோவையில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழகம் 3 ஆண்டுகளுக்கு முன் 2020-21ம் ஆண்டில் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.2,985 ஆகும். ஆண்டுக்கு 5% உயர்வு என்று வைத்துக் கொண்டாலும் நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3450 -ரூ.3500 என்ற அளவை எட்டியிருக்க வேண்டும். வட மாநிலங்களில் 10% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்பை உற்பத்திச் செய்ய டன்னுக்கு ரூ. 3,500 முதல் ரூ.3,800 வரை செலவு ஆவதாக உழவர் அமைப்புகள் கூறியுள்ளன.
இந்த மதிப்பீடுகள் அனைத்தையும் மறைத்து விட்டு, ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.1570 மட்டும் தான்; அதை விட இரு மடங்கு தொகையை கொள்முதல் விலையாக வழங்குகிறோம் என்பது உற்பத்திச் செலவுகளை மட்டுமின்றி, உழவர்களையும் குறைத்து மதிப்பிடும் செயல் ஆகும். இன்னொருபுறம், தமிழக அரசும் உழவர்களுக்கு உதவவில்லை. தமிழகத்தில் 2016-17ம் ஆண்டு வரை மத்திய அரசு அறிவிக்கும் விலைக்கு மேல் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அப்போது, மத்திய அரசின் விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.650 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அப்போதைய அரசு புகுத்திய வருவாய்ப் பகிர்வு முறையை காரணம் காட்டி மாநில அரசின் ஊக்கத்தொகை குறைக்கப்பட்டது. இப்போது டன்னுக்கு ரூ.195 மட்டும் தான் மாநில அரசின் சார்பில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதையும் சேர்த்தால் உழவர்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.3,114.75 மட்டுமே விலையாகக் கிடைக்கும்.
ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய ரூ.3,500 வரை முதலீடு செய்யும் உழவர்களுக்கு ரூ.3,114.75 மட்டும் கொள்முதல் விலையாக வழங்கினால் அது அவர்களுக்கு எந்த வகையில் கட்டுபடியாகும்? வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் போது, அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து நிர்ணயிக்க வேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்துவதாக மத்திய அரசு கூறிக்கொள்கிறது. ஆனால், உற்பத்திச் செலவை குறைத்துக் காட்டி, இலாபத்தை உயர்த்தி வழங்குவதாக கூறுவது ஏட்டு சுரைக்காயாகவே இருக்கும்.
கரும்பு சாகுபடியை லாபமானதாக மாற்ற வேண்டுமானால், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரை அதன் உண்மையான உணர்வுடன் செயல்படுத்தப்பட வேண்டும். அதன்படி, ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3,500 என்பதை அடிப்படையாகக் கொண்டு, அத்துடன் 50% லாபம், அதாவது ரூ.1750 சேர்த்து கொள்முதல் விலையாக ரூ.5,250 நிர்ணயிக்க வேண்டும். குறைந்தது கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5000 கொள்முதல் விலையாக வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago