சென்னையில் அரசு நிலங்களை தனியாருக்கு பதிவு செய்த விவகாரத்தில் மாவட்ட பதிவாளர் சிவப்பிரியா நிரந்தர பணி நீக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் அரசுக்கு சொந்தமான ஏரி, குளம், புறம்போக்கு நிலங்களை முறைகேடாக தனியாருக்கு பதிவு செய்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மாவட்ட பதிவாளர் சிவப்பிரியா நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சென்னையில் வருவாய் துறைக்கு சொந்தமான ஏரி, குளம், குட்டை, புறம்போக்கு நிலங்களில் பல நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டு, தனியாருக்கு பதிவு செய்து தரப்பட்டுள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை விருகம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் தணிக்கை நடத்தப்பட்டது. இதில்,முறைகேடு பதிவுகள் அதிக அளவில் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட பதிவாளர் சிவப்பிரியாவிடம் விசாரணை நடத்த பதிவுத் துறை உத்தரவிட்டது. மாவட்ட தணிக்கை பதிவாளர் ஸ்ரீசித்ரா விசாரணை நடத்தியபோது, சென்னையில் உள்ள 2 ஏரிகள், மயானம், மேய்க்கால் புறம்போக்கு, குடிசை மாற்று வாரிய நிலங்கள், அரசு புறம்போக்கு என 44 இடங்கள் முறைகேடாக மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்த அறிக்கையை பெற்ற பதிவுத் துறை, காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. காவல் துறை விசாரணையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில், பள்ளிக்கரணையில் 1995-ல் காலமான ஒருவரது நிலத்தை, ஆள்மாறாட்டம் மூலம் 2017-ம் ஆண்டு பதிவு செய்த புகாரில் சிவப்பிரியா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தவறு நிரூபிக்கப்பட்டதால், 2018-ல் சிவப்பிரியா கைது செய்யப்பட்டார். தற்காலிக பணிநீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த சூழலில், அரசு நிலங்களை தனியாருக்கு முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில், சிவப்பிரியாவை பணிநீக்கம் செய்யுமாறு பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிந்துரை செய்தார். இதன்பேரில், சிவப்பிரியாவை பணிநீக்கம் செய்து துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE