கலவையில் பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய கூடம் - சமூக விரோத கும்பல்களின் புகலிடமாக மாறிய அவலம்

By ப.தாமோதரன்

ஆற்காடு: கலவையில் பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை -வாழைப் பந்தல் செல்லும் சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு அருகே சமுதாயக்கூடம் செயல்பட்டு வந்தது. இந்த சமூதாயக்கூடத்தில் கலவை சுற்றுவட்டாரத்தில் உள்ள பென்னகர், வேம்பி, மழையூர், மாம்பாக்கம்,சென்னசமுத்திரம், அத்தியானம், நல்லூர் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் காதணி விழா, நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் விழா, மஞ்சள் நீராட்டு விழா என பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2020-ம் ஆண்டு கலவை வட்டமாக அறிவிக்கப்பட்டது. அது முதல் கலவை வட்டாட்சியர் அலுவலகம் இந்த சமுதாயக்கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்த சமுதாயக்கூடம் பூட்டியே கிடக்கிறது. இந்த வளாகத்தைச் சுற்றிலும், புதர் மண்டி விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் சமுதாயக்கூடத்தை மதுக்கூடமாக மாற்றி வருகின்றனர்.

ஒரு சில தனியார் வாகன ஓட்டிகள் இலவச வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாழடைந்து வரும் இந்த சமுதாயக் கூடத்தை மறு சீரமைப்பு செய்து, மீண்டும் ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் குடும்பங்களின் சுப நிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில் நடத்துவதற்கு சிறந்த இடமாக இந்த சமுதாயக் கூடம் இருந்து வந்தது. அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்ற இடமாக இந்த சமூதாயக் கூடம் இருந்து வந்தது.

ஆனால், கடந்த சில மாதங்களாக புதர் மண்டி, பாழடைந்து பூட்டியே கிடக்கிறது. சமூக விரோத கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சமுதாயக்கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இது குறித்து கலவை பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "சமுதாயக்கூடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன. அந்த பணிகள் நிறைவு செய்த பிறகு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE