32 கி.மீ வழித்தடம், 27 ரயில் நிலையங்கள் - மதுரை மெட்ரோ திட்ட இறுதி அறிக்கை ஜூலை 15-ல் அரசிடம் சமர்பிப்பு

By என். சன்னாசி

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான இறுதி அறிக்கை ஜூலை 15ல் அரசிடம் சமர்பிக்கப்படும் என திட்ட மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறினார்.

மதுரையில் ரூ. 8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, முதல் கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை வரை சுமார் 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்படுகிறது. திருமங்கலம் - வசந்தம் நகர் வரை உயர்நிலை பாலமும், வசந்தம்நகர் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை சுமார் 10 மீட்டர் ஆழத்தில் பூமிக்கடியிலும், தல்லாகுளம் - ஒத்தக்கடை உயர்நிலை பால வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

இதற்கான மண் பரிசோதனை, வழித்தடம், ரயில் நிலையம் அமைவிட பகுதி என, 90 சதவீத ஆய்வு பணிகள் முடிந்து, ஜூலை 15 ம் தேதி இறுதி அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதன்பின், டெண்டர் அறிவிப்பு செய்து, 2024ல் பணி தொடங்குகிறது. இதையொட்டி, மெட்ரோ திட்ட நிர்வாக மேலாண்மை இயக்குநர் சித்திக், திட்ட இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேற்கு, வடக்கு மாசி வீதிகள், ரயில் நிலையம், தல்லாகுளம் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.

இதன்பின், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இறுதி அறிக்கை சமர்பித்தல் குறித்து நிர்வாக மேலாண்மை இயக்குநர் சித்திக் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதா, டிஆர்ஓ சக்திவேல் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன்பின், மேலாண்மை இயக்குநர் சித்திக் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மதுரை மெட்ரோ திட்டத்துக்கான வரைவுத்திட்ட பணி ஏறக்குறைய நிறைவுபெற்றுள்ளது. இறுதிக்கட்டமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தோம். ஜூலை 15-ல் தமிழ்நாடு அரசிடம் இறுதி திட்ட அறிக்கை சமர்பிக்கப்படும். இத்திட்டத்தில் மொத்தமுள்ள 32 கிலோ மீட்டர் தூரத்தில் 5 கிலோ மீட்டர் சுரங்கபாதையிலும், எஞ்சிய 27 கிலோ மீட்டர் தூரம் மேல்நிலை வழித்தடமாகவும் அமைக்கப்படும்.

27 ரயில் நிலையங்களில் 3 சுரங்க பாதையில் அமைக்கிறது. மதுரை ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையத்தை ஒருங்கிணைத்து ஒன்றும், மீனாட்சி அம்மன் கோயில், கோரிப்பாளையம் என 3 சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். அரசுக்கு அறிக்கை சமர்பித்தபின், மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பன்னாட்டு நிதி ஆதாரங்களை பெற்று பணி தொடங்கப்படும்.

மாசி வீதிகளில் சித்திரை திருவிழா தேரோட்டப் பாதை, அப்பகுதியிலுள்ள பழமையான கட்டிடங்கள் பாதிக்கப்படாமல் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படும். மேலும், மதுரையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், பல இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவையெல்லாம் பாதிக்காமல் திட்டத்தை செயல்படுத்துவோம்.

பணி தொடங்கிய முதல் மேல்மட்ட வழித்தடம் 3 ஆண்டிலும், சுரங்கப்பாதை அமைக்க சுமார் நான்கரை ஆண்டும் தேவைப்படும் என கருதுகிறோம். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்தவரை போக்குவரத்துக்கு பாதிப்பின்றி பார்த்துக் கொள்வோம். வழித்தடம் எந்த வழியில் வருகிறது என்பதை தெளிவாக ஆய்வு செய்துவிட்டோம். உயர்மட்ட வழித்தடத்தில் சராசரி ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையமும், சுரங்கப் பாதையில் ஒன்றரை கி.மீட்டருக்கு தலா ஒரு நிலையமும் அமைக்கப்படும். வைகை ஆற்றில் கடக்கும் நிலத்தடி வழித்தடம் சுமார் 10 மீட்டரும், பிற இடங்களில் தேவைக்கேற்ப ஆழத்திலும் அமையும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான இறுதி அறிக்கை ஒரே நாளில் அரசிடம் சமர்க்கப்படும்" இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE