உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களை உடனே நியமிக்க அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஆகமக் கோயில்களில் அவற்றுக்குப் பொருத்தமான ஆகமம் மற்றும் சடங்குகள் தெரிந்த எவரையும் அர்ச்சகராக நியமிக்கலாம். அதற்கான விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட அந்தக் கோயிலின் நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அத்தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

சேலம் சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர்களாகப் பணிபுரிய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என 2018ம் ஆண்டு அக்கோயிலின் நிர்வாக அலுவலர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து அக்கோயிலில் அர்ச்சகராக இருந்த முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பரம்பரை பரம்பரையாகத் தமது குடும்பத்தினரே அக்கோயிலில் அர்ச்சகர்காளாக இருந்து வருவதாகவும்; எனவே, அர்ச்சகராக தானே நீடிக்கவேண்டும் எனவும் கோரினார்.

திருக்கோயில்களில் சாதி பேதங்களை அகற்றும் விதமாக அர்ச்சகர்களைத் தகுதியின் அடிப்படையில் நியமிக்கும் சட்டம் தமிழக அரசால் 1970ம் ஆண்டு இயற்றப்பட்டது. அது தொடர்பான வழக்கில் ( Seshammal & others Versus State of Tamilnadu (1972) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘ அர்ச்சகர் நியமனம் என்பது சமயச் சார்பற்ற ஒரு நடவடிக்கை’ எனவே அரசு அதைச் செய்யமுடியும் எனவும்; ஆகமங்களிலும் சடங்குகளிலும் முறையாகப் பயிற்சி பெற்ற எவரும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் எனவும் உறுதிசெய்தது.

"என்.ஆதித்யன் -எதிர்- திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு(2002) " - என்ற வழக்கில் வழங்கப்பட்ட இன்னொரு தீர்ப்பில், பிராமணர்கள் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்ற வாதத்தை நிராகரித்துவிட்டதோடு பயிற்சி பெற்ற எவரும் அதைச் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், [முத்துசுப்ரமணிய குருக்கள் -எதிர்- ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பிறர்; [ W.P No 3997 of 2018 & WMP Nos 4916 and 4948 of 2018 & 12136 of 2022; நாள்- 26.06.2023 ]- என்னும் வழக்கில், ஆகமப்படி கட்டப்பட்டது தான் என உறுதியாகத் தெரியும் கோயில்களில் ஆகமங்கள், சடங்குகள் முதலானவற்றில் பயிற்சி பெற்றவர்களை அரசாங்கம் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு கோயில் ஆகமக் கோயிலா அல்லது ஆகமக் கோயில் இல்லையா என்பதைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ‘கமிட்டி’ தற்போது செயல்படவில்லை என்பதால், அவ்வாறு கண்டறியும் வரையில் அர்ச்சகர் இல்லாமல் கோயில் இருக்க முடியாது. எனவே ஒரு கோயில் எந்த ஆகமத்தின் கீழ் உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தால் அந்த ஆகமத்தில் பயிற்சி பெற்ற எவரையும் அக்கோயிலில் அர்ச்சகராக நியமிக்கலாம் என உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

" எல்.இளையபெருமாள் கமிட்டி" அறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் கருணாநிதி மேற்கொண்ட சட்ட முயற்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது. 2023 ஜூன் மாதத்தில் நூற்றாண்டு கண்டிருக்கும் அந்த இரு ஆளுமைகளுக்கும் கிடைத்த பரிசாக இதைக் கருதுவது மிகையல்ல.

இந்தத் தீர்ப்பு கருணாநிதி மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றி ஆகும். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அவர்களுக்குப் பொருத்தமான திருக்கோயில்களில் நியமிக்கத் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கவேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்