தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டுப் பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து அருகேயுள்ள மாட்டு மேஸ்திரி சந்தின் முகப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையினால், இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு மிகவும் இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு குடிமகன்களின் தொல்லைக்கு ஆளாகின்றனர். எனவே இக்கடையை மூடக் கோரி பல்வேறு தரப்பினரும் பல முறை உயர் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்து போராட்டங்களும் நடத்தியும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு கடந்த வாரம் மூடிய 500 மதுக்கடைகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கடைகள் மூடப்பட்டன. அப்போது இக்கடையும் மூடப்படும் என எதிர்பார்த்த நிலையில், இந்தக் கடை தொடர்ந்து செயல்படுவதால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். எனவே, இந்தக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் இ.வசந்தி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர் சி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ந.குருசாமி, தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் அப்பகுதியிலுள்ள ஏராளமான வணிகர்கள் பங்கேற்று, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து, இந்தக் கடையை பூட்டுப் போட முயன்றனர். போலீஸார் தடுத்ததால், கடைக்கு முன் தரையில் அமர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கமிட்டனர். இதனால் டாஸ்மாக் கடை சுமார் 1 மணி நேரம் மூடப்பட்டது.

பின்னர், அந்த இடத்திற்கு வந்த டாஸ்மாக் துணை மேலாளர் செல்வபாண்டியன், டிஎஸ்பி பி.என். ராஜா, காவல் ஆய்வாளர்கள் வி. சந்திரா, எஸ்.கருணாகரன் ஆகியோரிடம், 20 நாட்களுக்கு கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர். இந்தக் கடையை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதயளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டன. இதனால் அப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் மதியம் 1 மணி வரை கடைகளை அடைத்திருந்தனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில்குமாரிடம், ஆய்வாளர் சந்திரா, வீட்டின் வாசலில் குடிப்பவர்களை கண்டிக்க வேண்டும், அதனை விட்டு கடையை மூடச் சொல்லலாமா எனக் கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE