மந்த கதியில் கில் நகர் பூங்கா சீரமைப்பு பணி: பதித்த 17 நாட்களில் பெயர்ந்த டைல்ஸ்கள்

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னையின் மத்திய பகுதியில் அமைந்த நகர்களில் ஒன்றாக சூளைமேடு உள்ளது. இதை சுற்றி கோடம்பாக்கம், வடபழனி, அமைந்தக்கரை, மகாலிங்கபுரம் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய சிறிய பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்காக சூளைமேடு கில்நகர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா சென்னை மாநகராட்சியின் 9-வது மண்டலத்தில் 109-வது கோட்டத்தில் பகுதி 24-ல் அமைந்துள்ளது.

கில் நகர், பஜனை கோவில், அண்ணா நெடும்பாதை, வடஅகரம் சாலை உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இப்பூங்கா முக்கிய பொழுதுபோக்கு தளமாக உள்ளது. இந்த பூங்கா 1998-ம் ஆண்டு மே 14-ம் தேதி அப்போதைய சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு சூழல், இளைஞர்கள், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை வசதி, யோகா பயிற்சிக்கான வசதி இடம்பெற்றுள்ளது. மேலும், உடற்பயிற்சி மேற்கொள்ள இடவசதியும் உள்ளது.

இந்த பூங்காவை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இப்பூங்கா காலை, மாலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பராமரிப்பு இல்லாததால், சுற்றுச்சுவர் இடிந்தும், நடைபாதை சேதமடைந்தும், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் பழுது ஏற்பட்டும் காணப்பட்டது. பூங்காவின் நடைபாதையை புதுப்பிக்கவும், புதிய விளையாட்டு உபகரணங்களை வாங்கவும் கில் நகர் நடப்போர் சங்கத்தினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கை அடிப்படையில், சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா மறுசீரமைப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஏப்ரலில் தொடங்கியது. ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப் பட்டு, பூங்காவை மூடி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. முதல்கட்டமாக, நடைபாதை அமைக்கப்பட்டது. மற்ற பணிகள் மெதுவாகவே நடைபெற்றன.

சூளைமேடு கில் நகர் பூங்காவில் புதியதாக அமைக்கப்பட்ட நடைபாதையில்
பெயர்ந்த டைல்ஸ்கள்.

இதற்கிடையில், இந்த பூங்கா கடந்த 1-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. புதிய நடைபாதை அமைக்கப்பட்டதால், பொதுமக்கள் வழக்கம்போல காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள தொடங்கினர். சில நாட்களில் நடைபாதையில் பதிக்கப்பட்ட ஓடுகள் (டைல்ஸ்கள்) விரிசல் விழத் தொடங்கின. பல ஓடுகள் சரியாக பதிக்காததால், பெயர்ந்து உடைந்தன. மேலும் ஓடுகளை சமமாக பதிக்காததால், ஏற்ற இறக்கமாக இருந்தது. இது நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.

மேலும், சிலர் தடுக்கி கிழே விழுந்தனர். இதை தொடர்ந்து, மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் கவுன்சிலர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெயர்ந்த ஓடுகளை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. இதனிடையே தரமற்ற ஓடுகளை பதித்து, முறைகேடு நடந்துள்ளதாகவும் பூங்கா மறுசீரமைப்பு பணி மந்தகதியில் நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மனோஜ் குமார்

இதுகுறித்து சூளைமேட்டைச் சேர்ந்த கே.மனோஜ்குமார் கூறியதாவது: கில் நகர் பூங்கா ரூ.40 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நடைபாதை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், தரமற்ற ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. மற்றப் பணிகளும் மந்த கதியில் தான் நடைபெறுகின்றன. ஓடுகள் சீராக பதிக்கப்படாததால், நடைபயிற்சி மேற்கொள்வோர் தடுக்கி கிழே விழும் நிலை உள்ளது. மரங்களை சுற்றி பாதுகாக்கும் அரணாக இருந்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் அமரும் இருக்கைகளும் அகற்றப்பட்டுள்ளன. உடற்பயிற்சி மேற்கொள்ள இருந்த விளையாட்டு உபகரணங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த பணிகளை எல்லாம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். தரமான சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். நடைபாதையில் பதிக்கப்பட்ட ஓடுகளை ஆய்வு செய்து, தரமற்ற ஓடுகளை அகற்றி புதிய ஓடுகளை பதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து மாநகராட்சி கவுன்சிலர் சுகன்யாவிடம் கேட்டபோது,”ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைப்பது, சுற்றுச்சுவர் அமைக்க ரூ.8 லட்சம், நமக்கு நாமே திட்டத்தில் ரூ.4 லட்சம் ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பூங்காசீரமைப்பு பணிகளை மெத்தனமாக மேற்கொண்டு வருகின்றனர். நடைபாதை விவகாரம் தொடர்பாக மன்ற கூட்டத்தில் எழுப்பியுள்ளேன். சீரமைப்பு பணியை தொடர்ந்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.

நடைபாதை டைல்ஸ்கள் பெயர்ந்தது தொடர்பாகவும், இதற்காகவும் செலவிடப்பட்ட நிதி தொடர்பாக மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, சரியாக விளக்கம் அளிக்காமல் தவிர்த்தார். இரண்டாவது முறையாக தொடர்பு கொண்டபோது, "பெயர்ந்த ஓடுகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூங்கா சீரமைப்பு பணி மேற்கொள்ள 180 நாட்கள் வரை கால அவகாசம் இருக்கிறது. எனவே, விரைவாக அனைத்து பணிகள் முடிக்கப்படும்" என்றார். புதியதாக அமைக்கப்பட்ட நடைபாதையில் ஆங்காங்கே விரிசல் சீரற்ற நிலை காணப்படு கிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான ஓடுகளை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE