ஆளுநர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழா - கருப்பு சட்டை தடையை திரும்ப பெற்றது பெரியார் பல்கலைக்கழகம்

By வி.சீனிவாசன்

சேலம்: ஆளுநர் ஆர்என் ரவி கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டை அணிந்து வர விதித்த தடையை சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வாபஸ் வாங்கியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார். இதற்காக சேலம் வரும் ஆளுநர் ரவிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சிகள், பெரியார் திக உள்ளிட்ட அமைப்பினர் கருப்பு கொடி காட்டவிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், கட்சி நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவும், பாஜக-வுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு காட்டி கருப்பு கொடி காட்டுவது எங்களது உரிமை என்றுகூறி காவல் துறை அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்து வருகின்றனர்.

இருப்பினும், காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கருப்பு சட்டை அணிய ‘தடா’: அதேநேரம் காவல்துறை அறிவுறுத்தலின்பேரில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்த தடைக்கு இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்ட குழு கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்டக் குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " எந்தச் சட்டை எதிர்ப்பு, எந்த சட்டை வரவேற்பு என்ற எந்த ஒரு தெளிவான வரையறையும் இல்லாத போது கருப்பு சட்டை எப்படி எதிர்ப்பு என கருதலாம். மாணவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது. பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த சுற்றறிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக திரும்ப பெற வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டது.

தொடர்ந்து அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுவாக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் கருப்பு சட்டை தடை விதித்த அறிவிப்பை திரும்ப பெற்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என்று பெரியார் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, கருப்பு சட்டை குறித்து எந்தவிதமான அறிவுறுத்தலும் வழங்கவில்லை என சேலம் காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்துக்கு காவல்துறை சார்பில் எந்தவித அறிவுறுத்தலுக்கு வழங்கப்படவில்லை என்று சேலம் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE