மதுரை மாட்டுத்தாவணியில் வட்டாட்சியரை பேருந்தில் ஏற்ற மறுத்த தனியார் பஸ் நடத்துநர் - போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

By இ.ஜெகநாதன்


திருப்பத்தூர்: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வட்டாட்சியரை தனியார் பேருந்து நடத்துநர் ஏற்ற மறுத்ததை அடுத்து, திருப்பத்தூர் வந்த பேருந்தை வழிமறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருப்பவர் கண்ணதாசன். இவர் திருப்பத்தூர் செல்வதற்காக மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏறினார். திருப்பத்தூர் செல்வோர் பேருந்து புறம்படும்போது, இடம் இருந்தால் ஏறிக் கொள்ளலாம், அதுவரை கீழே இறங்கி நிற்குமாறு நடத்துநர் கூறினார். இதனால் அவருக்கும், வட்டாட்சியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து வட்டாட்சியர் அதே பேருந்தில் திருப்பத்தூர் வந்தார்.

அதற்கு முன்பாகவே வட்டாட்சியரை ஏற்ற மறுத்த தகவல் திருப்பத்தூர் மக்களுக்கு பரவியது. இதையடுத்து, திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே வந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். அங்கு வந்த போலீஸார் பொதுமக்களை சமரசப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இதேபோல் மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் பயணிகளை அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துநர்கள் ஏற்ற மறுப்பதும், பொதுமக்கள் போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE