திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் தங்க சிவலிங்கத்தை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு 

By கி.மகாராஜன் 


மதுரை: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் தங்க சிவலிங்கத்தை முதன்மை சார்பு நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் திருவட்டாறு தங்கப்பன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கக் கோரிய வழக்குகளில் உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. கோயில் கலசங்களை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கும்பாபிஷேகம் நடைபெற்றபோது பழைய கலசம் மற்றும் தங்க தங்க ஆபரணங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

கடந்த 1992-ல் தங்க அங்கி உள்பட பல பொருட்கள் காணாமல் போனது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கோயிலுக்கு சொந்தமான பல தங்க நகைகள், சிலைகள் எங்கிருக்கிறது என தெரியவில்லை. இது குறித்து கேட்டதற்கு முறையாக பதில் தரவில்லை. எனவே திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில் தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம் மற்றும் தங்க நகைகளை கோயிலில் பழைய இடங்களில் வைக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கோயிலில் இருந்த 6 முதல் 8 கிலோ எடையுள்ள தங்க சிவலிங்கம் மாயமாகிவிட்டது. அதை கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. அரசு தரப்பில், தங்க சிவலிங்கம் மாயமாகவில்லை. பத்மநாபபுரத்தில் உள்ள கோயில் நகை பாதுகாப்பகத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ''பத்மநாபபுரம் கோயில் நகை பாதுகாப்பகத்தில் முதன்மை சார்பு நீதிபதி ஆய்வு செய்து தங்க சிவலிங்கத்தை நகை மதிப்பீட்டாளர் முன்னிலையில் எடை போட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோயில் நகை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் திரும்ப பெறக்கோரிய மனுவை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு அடுத்த விசாரணையை ஜூன் 30-க்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE