‘‘கருணாநிதி பெயர் வைக்கும் விழாவை மட்டும் நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்” - வி.வி.ராஜன் செல்லப்பா

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கருணாநிதி பெயரில் பெயர் வைக்கும் விழாவை மட்டும் நடத்தி வருகிறார்” என்று என்று அதிமுக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு முகாம் திருநகரில் நடைபெற்றது. அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வைத்தார். மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கே சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் பொன்.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில், ‘‘ஸ்டாலின் தொடர்ந்து கருணாநிதி பெயரில் பெயர் வைக்கும் விழாவை மட்டும் நடத்தி வருகிறார். மக்களை பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. விட்டால் தமிழ்நாட்டுக்கு கருணாநிதி என்று பெயர் கூட வைத்து விடுவார். அமைச்சர் தியாகராஜன் பேசிய ஆடியோ பதிவு வெளிவந்தது. ஸ்டாலின் இதுவரை பதில் சொல்லவில்லை. அந்த ஆடியோ குறித்து இதுவரை மறுத்து கூட பேசவில்லை. ஸ்டாலின் பிஹார் சென்றார். ஆனால், நிதிஷ் குமார் அளித்த விருந்தில் பங்கேற்கவில்லை. ஏனென்றால், தனது தந்தையின் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க வரவில்லை என்ற ஆதங்கத்தில் திரும்பி வந்து விட்டார்.

மதுரை மாநகராட்சி மிகவும் மோசமாக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த துணை மேயரும் மதுரை மாநகராட்சி குளறுபடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டை கூறிவிட்டனர். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிகள் சீட்டுகளை அதிகமாக எதிர்பார்த்து வருகின்றனர். இப்படியே பங்கு போட்டால் திமுகவிற்கு 13 சீட்டுதான் வரும். திமுகவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதால் கூட்டணி உடையும் அபாயம் உள்ளது. ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையும் சூழ்நிலை உள்ளது” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE