மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணிகளில் ஒப்பந்த முறையை கைவிடுக: முத்தரசன்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மற்றும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும்; ஈரோடு மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டத்துக்கு சுமுகத் தீர்வு காணுங்கள் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடுவதை கைவிடக் கோரி 23-06-2023 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தூய்மைப் பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடுவதால் 1000-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படாது. ஏற்கெனவே பணியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் அந்த பணியில் இருந்து அப்பறப்படுத்தப்படுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை உள்ளது.

நாளொன்றுக்கு ரூ.707/- ஊதியம் பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.532/- ரூபாயாக ஊதியம் குறைக்கப்படுகிறது. வேலைப்பளு 2, 3 மடங்கு அதிகரிக்கிறது. சுமார் இருபது ஆண்டுகள் பணியாற்றி வரும் நிரந்தரமற்ற ஒப்பந்த, தினக்கூலி, சுய உதவிக் குழு போன்ற தொழிலாளர்கள் 40% வரை வேலையை விட்டு நிறுத்தப்படுகின்றனர்.

எனவே, ஈரோடு மாநகராட்சி, தூய்மை பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடுவதை கைவிட வேண்டும், இதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.725/-ஐ ஏப்ரல் முதல் வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

தொழிலாளர்கள் போராடி வரும் சூழலில் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு எட்டப்படவில்லை. தமிழ்நாடு அரசின் நகராட்சிகள் நிர்வாக இயக்குநகரகம், திடக்கழிவு மேலாண்மை விதிகளை காரணம் காட்டி இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளை காரணம் காட்டி ஒடுக்கப்பட்ட பகுதி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக பணிபுரியும் தூய்மை பணியை ஒப்பந்தம் விடுவது பொருத்தமான நடவடிக்கை அல்ல. கழிவுகளும், குப்பைகளும் நாள்தோறும் அதிகரித்து வரும் சூழலில் ஏற்கனவே தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த நிலையில், பணியில் உள்ள தொழிலாளர்களை பாதியாக வெட்டிக் குறைப்பது தமிழ்நாட்டின் பொது சுகாதாரத்திற்கும் மிகுந்த அச்சுறுத்தலாக அமையும்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த ஒப்பந்த முறையை கைவிடவும் அது தொடர்பான அரசாணைகள், நிர்வாக உத்தரவுகளை திரும்பப் பெறவும் முன்வர வேண்டும்.

போராடும் ஈரோடு மாநகராட்சி தொழிலாளர்கள் பிரதிநிகளை அழைத்து பேசி சுமுகத் தீர்வு எட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE