நாடாளுமன்றத் தேர்தல் | ஜூலை 4ல் தொடங்குகிறது வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழகத்தைப் பொருத்தவரை, 2024 நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதுமான அளவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் உள்ளன" என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தேர்தலுக்கு முன்பாக, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் சரியாக இருக்க வேண்டும். அதில் ஏதாவது கோளாறுகள் இருப்பின், அதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கான பணிகள் வரும் ஜூலை 4ம் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு பொதுத் தேர்தலின்போதும், இதுபோல ஒரு வருடத்துக்கு முன்பே இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். இந்த பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பான முறையில் வைக்கப்படும். தமிழகத்தைப் பொருத்தவரை, 2024 நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதுமான அளவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் உள்ளன.

ஏப்.1, ஜூலை 1, அக்.1, இந்த தேதிகளுக்குள் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், முன்கூட்டியேகூட வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். உதாரணத்துக்கு ஏப்.1ல் 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், அடுத்த 3 மாதத்தில், அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE