தருமபுரி | கோயில் திருவிழா சர்ச்சை காரணமாக பாயசத்தில் விஷம் கலந்து சாப்பிட்ட கிராம மக்கள் - 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் வேப்ப மரத்தூர் கிராமத்தில் கோயில் திருவிழா தொடர்பான சர்ச்சை காரணமாக கிராம மக்கள் பாயசத்தில் விஷம் கலந்து குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாயசம் அருந்தியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கோடுஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வேப்பமரத்துர். சுமார் 250 குடும்பத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ஊர் தலைவர் துரை என்பவரின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்துள்ளார். இதனால் கோயில் திருவிழாவுக்காக அவர் குடும்பத்தாரிடமும், கும்பாபிஷேக திருவிழாவுக்கும் வரி வாங்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடா்பாக சுரேஷ் குடும்பத்தார் காவல்துறையில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். இதையடுத்து, பொம்மிடி காவல் நிலைய போலீஸார் வேப்பமரத்தூர் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்டனர். மேலும், காவல்துறையினர் கிராமத்தில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) இரு தரப்பினரையும் அழைத்து தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வம் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிராம மக்கள் திங்கள்கிழமை (ஜூன் 26) இரவு கோயில் முன்பு திரண்டனர். அங்கேயே அடுப்பு மூட்டி பாத்திரம் ஒன்றில் பாயசம் தயாரித்தனர். பின்னர், அதில் பூச்சி மருந்துகளை கலந்து பாயசத்தை சாப்பிடத் தொடங்கினர். 6 பேர் பாயசம் சாப்பிட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றவர்கள் பாயசத்தை சாப்பிடவிடாமல் தடுத்தனர். மேலும், பாயசம் சாப்பிட்ட 6 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பாயசம் தயாரிப்பது, விஷம் கலப்பது, சாப்பிடும்போது போலீஸார் தடுப்பது உள்ளிட்ட காட்சிகளை கிராம மக்கள் வீடியோ பதிவாக்கி சமூக ஊடகங்ளில் பதிவேற்றியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறும்போது, 'கும்பாபிஷேக விழாவுக்கு யாரிடமும் வரி வசூலிக்கவில்லை. பொது நிதி மூலம்தான் ஏற்பாடுகள் செய்தோம். கோயிலுக்கு வர யாருக்கும் தடை எற்படுத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பும் திருவிழாவின்போது சுரேஷ் குடும்பத்தார் இதுபோலவே புகார் அளித்ததால் கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போதும் திருவிழாவை தடுக்க பொய் புகார் அளித்துள்ளனர். அந்த விரக்தியில் தான் இப்படியொரு முடிவெடுத்தோம்' என்றனர். திருவிழா விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் பாயசத்தில் விஷம் கலந்து சாப்பிட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE