கோவையில் என்று முடியும் தெருநாய்கள் தொல்லை?

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவையில் அனைத்து இடங்களிலும் தெருநாய்கள் சுற்றித் திரிவதை காண முடிகிறது. குறிப்பாக, மாநகரில் கடந்த 2006-ம் ஆண்டு 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை, நடப்பாண்டு கணக்கின்படி 1.11 லட்சமாக உயர்ந்துள்ளது. கட்டுப்பாடு இன்றி பெருகிக் காணப்படும் தெருநாய்கள் மற்றும் சாலைகளில் சுற்றும் கால்நடைகளான ஆடு, மாடு, குதிரை உள்ளிட்டவை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 2006-ம் ஆண்டு சீரநாயக்கன்பாளையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்ப விடப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒண்டிப்புதூரிலும், சமீபத்தில் உக்கடத்திலும் தெருநாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. இங்கு தினமும் சராசரியாக 20 முதல் 25 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

சமூக செயல்பாட்டாளர்கள் ராஜ்குமார், சரவணன் உள்ளிட்டோர் கூறும்போது, ‘‘கோவை மாநகரில் ஆண்டுக்கு சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடி பாதிப்பின் காரணமாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக தெருநாய் கருத்தடை அறுவைசிகிச்சை முறையாக செய்யப்படவில்லை. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீதியிலும் குறைந்தது 4 தெருநாய்கள் உள்ளன. இவை இரவு நேரங்களில் நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே அச்சப்படுகின்றனர். தவிர, இந்த தெருநாய்கள் திடீரென சாலைகளின் குறுக்கே பாய்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு விபத்தை ஏற்படுத்துகின்றன.

அதேபோல, சாலைகளில் கட்டுப்பாடின்றி சுற்றும் கால்நடைகளாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. சுங்கம் ரவுண்டானா, வாலாங்குளம்-உக்கடம் பைபாஸ் சாலை, வின்சென்ட் சாலை, உக்கடம் சாலை, பேரூர் பைபாஸ் சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, சுங்கம் சாலை, ராஜவீதி, ஆர்.எஸ்.புரம், காந்திபார்க், ரெட்பீல்ட்ஸ் சாலை, துடியலூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகள் சர்வ சாதாரணமாக கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றன.வாகனங்கள் வரும் போது திடீரென குறுக்கே புகும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். கால்நடைகளை பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

கோவை இடையர்பாளையம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு
ஏற்படுத்தும் வகையில் சுற்றும் மாட்டை தடியால் விரட்டு வாகன ஓட்டி.

மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் இடங்களில் உடனடியாக பிரத்யேக வாகனங்கள் மூலம் தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சமீபத்தில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பிரத்யேக வாகனங்கள் மூலம் 15-க்கும் மேற்பட்ட பசு, காளை உள்ளிட்ட கால்நடைகள் பிடிக்கப்பட்டன. அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கால்நடைகளை கோ-சாலையில் விட்டு பராமரிப்பதிலும் சிக்கல் உள்ளது’’ என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE