அனுமதியில்லாத இடங்களில் ஆடு, மாடு வெட்டப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: திருச்சி மாவட்டத்தில் அனுமதியில்லாத இடங்களில் ஆடு, மாடு வெட்டப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ரங்கராஜ நரசிம்மன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை ஜூன் 29-ல் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் குர்பாணி என்ற பெயரில் ஆடு, மாடுகளை பலியிட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக மாடுகள் திருச்சி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு இடங்களில் இறைச்சிக்காக வெட்டப்படுகிறது.

திருச்சியில் ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதியில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன. கால்நடைகளைப் பலியிடுவது தொடர்பாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள், வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளன. அவை முறையாக பின்பற்றப்படுவுதில்லை.

சட்டவிரோதமாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பலியிடுவது அதிகரித்து வருகிறது. மதத்தின் பெயரால் விலங்குகள் பலியிடப்படுவதை தடுக்க வேண்டும். குர்பாணிக்காக அனுமதியில்லாத இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆடு, மாடுகள் பலியிடுவது தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்தப் புகைப்படங்கள் 2022-ல் எடுக்கப்பட்டது என தெரிவித்த நீதிபதிகள், “பக்ரீத் நெருங்கும்போது மனுவை தாக்கல் செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினால் எவ்வாறு முடியும்? கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்ய என்ன காரணம்?” என்றனர்.

பின்னர் நீதிபதிகள், அனுமதியில்லாத இடங்களில் ஆடு, மாடுகள் வெட்டப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE