அதிமுகவின் நலன் பாதிக்காத வகையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு: ஜெயக்குமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "எங்களுடைய கட்சி மற்றும் கழகத்தின் நலன் இரண்டுமே முக்கியம். அதை பாதிக்காத வகையில்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எத்தனை முறைதான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது. அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று பலமுறை சொல்லிவிட்டேன்" என்றார்.

அப்போது கூட்டணியில் பாஜகவுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நீங்கள் யாரும் சிண்டு முடிய வேண்டாம். ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். எங்களுடைய கட்சி மற்றும் கழகத்தின் நலன் இரண்டுமே முக்கியம். அதை பாதிக்காத வகையில்தான் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இடங்கள் ஒதுக்கீடு குறித்துப் பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட 10 மாதங்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது, இடங்கள் ஒதுக்கீடு தொடர்பாக குழு அமைக்கப்படும். எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதை முடிவு செய்ய ஒரு குழு நியமிக்கப்படும். அதில் கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளும் இருக்கும்.

எனவே, இதுபோன்ற நேரத்தில், கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களது தரப்பு கோரிக்கைகளை முன்வைப்பார்கள். முன்வைக்கப்படும் அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை முடிவும் செய்கிற இடம் அதிமுகதான். முடிவெடுப்பது நாங்கள்தான்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE