தென் மாவட்டங்களில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமையுமா?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரி முதன் முதலில் 1953-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, சிதம்பரத்தில் 2021-22-ம் நிதியாண்டில் 2-வது அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரிகூட தொடங்கவே இல்லை. தற்போது, புதுக்கோட்டையில் 3-வது அரசு பல் மருத்துவக் கல்லூரி திறக்கப்பட உள்ளது. அனைத்துச் சிகிச்சையிலும் முன்மாதிரியாக திகழும் தமிழகம், பல் மருத்துவ சிகிச்சையில் பின்தங்கியே உள்ளது.

பல் சிகிச்சை ஏழைளுக்கு எளிதாகக் கிடைக்கவும் மாவட்டந்தோறும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியதாவது: அனைத்து சிகிச்சைகளுக்கும் காப்பீடு உள்ள நிலையில் பல் சிகிச்சைக்கு காப்பீடு இல்லை. அதனால், நடுத்தர, ஏழை மக்கள் தவிக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பல் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பல் பிடுங்குவது, பற்குழிகளை அடைப்பது, செயற்கை பல் பொருத்துவது மற்றும் வேர் சிகிச்சை மட்டும் அளிக்கின்றனர். இதில், பாதிக்கப்பட்ட பற்களுக்கு மேல் கேப் போடவும், கழட்டி மாட்டும் வகையிலான பிளாஸ்டிக் பல் செட் பொருத்தவும், பாதிக்கப்பட்ட பல்லுக்கு பதில் மாற்றுப் பல் கட்ட கட்டணம் உண்டு. இந்தச் சிகிச்சைகளுக்கு ஒரு பல்லுக்கு ரூ.320 கட்டணம் செலுத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் வேர் சிகிச்சை செய்து பல் துளைகளை நிரப்ப ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் புதிய செயற்கைப் பல் வைப்பதற்கு, ஆயிரக்கணக்கிலும் கட்டணம் வசூலிக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 5 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளாவது தொடங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் புதுக்கோட்டையில் மட்டும் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைகிறது.

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளோ 2 மட்டுமே உள்ளன. அதேநேரம் 20 தனியார் பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. 2001 முதல் 2021 வரை தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 13,755 மருத்துவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

இதில் 896 மருத்துவர்களை மட்டும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கியுள்ளன. இதேபோல எம்டிஎஸ் படித்த மருத்துவர்களும் குறைவாகவே உள்ளனர். 90 சதவீதத்துக்கு மேல் பல் மருத்துவர்களை தனியார் கல்லூரிகளே உருவாக்குகின்றன. மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 4 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

ஆனால், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரிகூட இல்லை. இதனால் தென்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பல் சிகிச்சை தரம் மேம்படாமல் உள்ளது. குறிப்பாக மதுரையைத் தவிர வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் பல் சீரமைப்பு அதி நவீன சிகிச்சை பெற செராமிக் லேப் வசதி இல்லை. எனவே, தென் மாவட்டங்களில் பல் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE